Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

கான்பூர்: வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றியது. 2வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளான இன்று, இந்திய அணி வெற்றி பெற 95 ரன்களை வெற்றி இலக்காக வங்கதேச அணி நிர்ணயம் செய்தது. முதல் இன்னிங்சில் வங்கதேசம் 233 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி 285 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்சில் இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால் 72 ரன், கே.எல்.ராகுல் 68 ரன்கள் எடுத்தனர். 2-வது இன்னிங்சில் வங்கதேச அணி 146 ரன்களில் ஆட்டமிழந்தது.

வங்கதேச அணியுடனான 2வது டெஸ்டில், வெற்றி முனைப்புடன் அதிரடியாக விளையாடிய இந்தியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன் குவித்து டிக்ளேர் செய்ததால் கடைசி நாள் ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிரீன் பார்க் மைதானத்தில் நடக்கும் இப்போட்டியின் முதல் நாளில் வங்கதேசம் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன் எடுத்த நிலையில் மழை காரணமாக அன்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது.

மழை தொடர்ந்து பெய்ததாலும், மைதானம் ஈரமாக இருந்ததாலும் அடுத்த 2 நாள் ஆட்டமும் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது. இந்த நிலையில், நேற்று நடந்த 4வது நாள் ஆட்டத்தில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 233 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

முஷ்பிகுர் 11, லிட்டன் தாஸ் 13, மெஹிதி ஹசன் மிராஸ் 20 ரன் எடுக்க... மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் விளையாடி சதம் அடித்த மோமினுல் ஹக் 107 ரன்னுடன் (194 பந்து, 17 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய பந்துவீச்சில் பும்ரா 3, சிராஜ், அஷ்வின், ஆகாஷ் தீப் தலா 2, ஜடேஜா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா, வெற்றி முனைப்புடன் அதிரடியில் இறங்க ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. ஜெய்ஸ்வால் - கேப்டன் ரோகித் ஜோடி 3 ஓவரில் 50 ரன் சேர்த்து டெஸ்ட் வரலாற்றில் புதிய சாதனை படைத்தது.

ரோகித் 23 ரன் (11 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி வெளியேற, ஜெய்ஸ்வால் - கில் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 72 ரன் சேர்த்தனர். இந்தியா 10.1 ஓவரில் 100 ரன்னை எட்டியதும் சாதனையாக அமைந்தது. ஜெய்ஸ்வால் 72 ரன் (51 பந்து, 12 பவுண்டரி, 2 சிக்சர்), கில் 39 ரன் (36 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), பன்ட் 9 ரன்னில் பெவிலியன் திரும்பினர். எனினும், அதிரடியை தொடர்ந்த கோஹ்லி - கே.எல்.ராகுல் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 87 ரன் சேர்த்தது.

கோஹ்லி 47 ரன் (35 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), ஜடேஜா 8, அஷ்வின் 1, கே.எல்.ராகுல் 68 ரன் (43 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), ஆகாஷ் தீப் 12 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இந்தியா 34.4 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன் என்ற ஸ்கோருடன் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது (ரன் ரேட் 8.22). டெஸ்ட் வரலாற்றில் விரைவாக 150, 200, 250 ரன் எடுத்த சாதனையும் நேற்று இந்தியா வசமானது குறிப்பிடத்தக்கது. பும்ரா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். சிராஜ் களமிறங்கவில்லை.

வங்கதேச பந்துவீச்சில் ஷாகிப் அல் ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ் தலா 4 விக்கெட், ஹசன் முகமது 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 52 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் 4ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 26 ரன் எடுத்துள்ளது. ஜாகிர் ஹசன் 10, ஹசன் முகமது 4 ரன் எடுத்து அஷ்வின் சுழலில் ஆட்டமிழந்தனர். ஷத்மன் 7, மோமினுல் (0) களத்தில் உள்ளனர். இன்று பரபரப்பான கடைசி நாள் ஆட்டத்தில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.