தடையை மீறி சபரிமலைக்கு டிராக்டரில் பயணம் கேரள ஏடிஜிபிக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்: டிரைவர் மீது வழக்கு
திருவனந்தபுரம்: சபரிமலையில் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு சரக்குகள் கொண்டு ெசல்லும் டிராக்டர்களில் டிரைவர் தவிர வேறு யாரும் பயணம் செய்யக்கூடாது என்றும் கடந்த 2021ம் ஆண்டு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 12ம் தேதி கேரள ஏடிஜிபி அஜித்குமார் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு டிராக்டரில் பயணம் செய்ததாக தகவல்கள் வெளியாகின.
இதன் அடிப்படையில் கேரள உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து ஒரு வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில் நேற்று , ஏடிஜிபி அஜித்குமாரின் நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. சரக்குகள் மட்டும் கொண்டு செல்லப்படும் டிராக்டரில் தான் ஏடிஜிபி பயணம் செய்துள்ளார். இது துரதிர்ஷ்டவசமானதாகும். சபரிமலையில் டிராக்டரில் பயணம் செய்தது உயர்நீதிமன்ற உத்தரவை மீறிய செயலாகும்.
இந்த சம்பவம் தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம் போர்டும், பத்தனம்திட்டா மாவட்ட எஸ்பியும் விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு கூறிய உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தது. இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக டிராக்டர் ஓட்டிய டிரைவர் மீது பம்பை போலீஸ் வழக்கு பதிந்துள்ளனர்.