Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஷிருய் லிலி திருவிழாவுக்கு சென்ற போது ‘மணிப்பூர்’ என்ற வார்த்தையை பயன்படுத்த தடை: 48 மணி நேர முழு அடைப்பு போராட்டம்

இம்பால்: ஷிருய் லிலி திருவிழாவுக்கு பத்திரிகையாளர்கள் சென்ற போது ‘மணிப்பூர்’ என்ற வார்த்தையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதாக கூறி 48 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடந்தது. மணிப்பூர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் உக்ருலில் நடந்த ஷிருய் லிலி திருவிழாவுக்கு, பத்திரிகையாளர்களை ஏற்றிச் சென்ற மணிப்பூர் மாநில போக்குவரத்து பேருந்தில் ‘மணிப்பூர்’ என்ற வார்த்தையை மறைக்குமாறு பாதுகாப்பு படைகள் உத்தரவிட்டதாக கூறப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பத்திரிகையாளர்கள் தங்கள் பணியை பாதியில் கைவிட்டு இம்பாலுக்கு திரும்பினர். இந்த சம்பவத்தை மணிப்பூர் ஒருமைப்பாடு ஒருங்கிணைப்பு குழு கண்டித்துள்ளது. மேலும் மாநில அரசின் அதிகாரத்தை குறைத்து மதிப்பீடு செய்யும் செயல் என்று கண்டித்து, 48 மணி நேர முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தது.

அதையடுத்து நேற்று மணிப்பூரின் முக்கிய நகரங்களில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இம்பாலில் டயர்களை எரித்து, முக்கிய இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அனைத்து மணிப்பூர் பத்திரிகையாளர்கள் ஒன்றியம் மற்றும் மணிப்பூர் எடிட்டர்ஸ் கில்ட் ஆகியவை அவசரக் கூட்டம் நடத்தி, ‘பேனாவை கீழே வைத்துவிட்டு போராடும் போராட்டம்’ என்ற தலைப்பில் போராட்டம் நடத்தியது. மேலும் இவ்விசயத்தில் ஆளுநரிடம் நடவடிக்கை எடுக்கக் கோரி ராஜ்பவனை நோக்கி பேரணி நடத்தினர்.

ராஜ்யசபா எம்பி மகாராஜா சனஜோபா லெய்ஷெம்பா இந்த நடவடிக்கையை வேதனையான செயல் என்று விமர்சித்தார். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023 மே முதல் மெய்தி மற்றும் குக்கி இன மோதல்களால் 260க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து, ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்த நிலையில், இந்த சம்பவம் மாநில அரசின் மீதான மக்களின் அதிருப்தியை மேலும் அதிகரித்துள்ளது.