தடைகளை தகர்த்தெறியும் திடந்தோள்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உண்டு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு
சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பேசுகையில்,‘‘திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலிலே அதிக அளவு தெலங்கானா, ஆந்திர பக்தர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்யும்போது பல தடைகளை ஏற்படக்கூடிய நிலை இருக்கிறது. ஆகவே அந்த கோயிலுக்காக நம்முடைய அரசின் மூலம் என்னென்ன வசதிகள் செய்யப்பட்டு இருக்கின்றது” என்றார். இதற்கு பதில் அளித்து இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது: தடைகள் பல உண்டு என்றாலும் அதை தகர்த்தெறிகின்ற திடந்தோள்கள் நம்முடைய முதல்வருக்கு உண்டு. என்பதை மெய்ப்பிக்கின்ற வகையில் பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கிடையே வெற்றியை பெற்று வருகிறோம். சமீபத்தில் கூட உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவர், தொடுக்கப்பட்ட வழக்கின் காரணமாக நேரடியாக வந்து களத்தில் ஆய்வு செய்து 34 பணிகள் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதிகள் நேரடி கள ஆய்வுக்கு பின் 19 பணிகளுக்கு அனுமதி அளித்திருக்கின்றனர். பெருந்திட்ட வரைவின் வாயிலாக இக்கோயிலின் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அந்த பணிகளை முதல்வர் துவக்கி வைக்க இருக்கிறார் என்று கூறினார்.


