Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நீலக்கொடி திட்டத்தின் கீழ் பணிகள் விறுவிறு; மெரினா கடற்கரையில் ஓய்வு எடுக்க மூங்கில் சாய்வுதளம் அமைக்க திட்டம்: மாநகராட்சி ஆணையர் தகவல்

தாம்பரம்: மெரினா கடற்கரை நீல கொடி திட்டத்தில் ஓய்வு எடுப்பதற்கான மூங்கில் சாய்வுதளம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். டென்மார்க் நாட்டின் சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை, உலகம் முழுவதும் கடற்கரைகளை ஆய்வு செய்து அதற்கு நீலக்கொடி கடற்கரை தகுதியை வழங்கி வருகிறது. இந்தச் சான்றிதழானது, தூய்மை, பாதுகாப்பு மற்றும் கடற்கரையின் நிலைமை உள்ளிட்ட சர்வதேச தரங்களைச் பூர்த்தி செய்யும் கடற்கரைகளுக்கு மட்டுமே வழங்கப்படும். அந்த வகையில், இந்தியாவின் 8 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் இதுவரை வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஏற்கனவே செங்கல்பட்டில் உள்ள கோவளம் கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், தற்போது அந்த பட்டியலில் சென்னை மெரினா கடற்கரையும் இணைய உள்ளது. மெரினா கடற்கரையில் நீலக்கொடி கடற்கரை திட்டத்திற்கான கட்டுமானங்களை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. நீலக்கொடி கடற்கரைகள் திட்டத்தின்படி, கடற்கரையை சுற்றியுள்ள பகுதிகள் பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் பாதுகாப்புடனும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலும் அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மெரினா முதல் சாந்தோம் கடற்கரை வரையிலான பகுதியில் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்கள் உள்ளதால் இந்த திட்டத்தின் கீழ் இந்த பகுதிகளில் பாரம்பரியம் சார்ந்த கட்டமைப்புகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், கடற்கரைப் பகுதியில் நடைபாதை, மிதிவண்டி தடங்கள், விளையாட்டு பகுதி, படகுத் துறை, கண்காணிப்பு கோபுரம், பாரம்பரிய தாவரங்கள் குறித்தான ஆய்வு போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த பணிகள் முடிந்த பின்னர் சென்னை மெரினா கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது நடந்து வரும் பணிகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் கூறுகையில், ‘‘நீலக் கொடி கடற்கரை வளாகம் பரபரப்பாக வேலை செய்யப்பட்டு வருகிறது. பணிகள் முழு வீச்சில் உள்ளன. சில மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

ஒரு விளையாட்டுப் பகுதி நிறைவடைந்துள்ளது. மூன்று பணிகள் நடைபெற்று வருகின்றன. மூங்கில் சாய்வு நாற்காலிகள் மற்றும் குப்பை தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் நிழல்கள் நிறுவப்பட்டுள்ளன. ஓய்வு எடுப்பதற்கான மூங்கில் சாய்வுதளம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்.