Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பக்ரீத் பண்டிகை அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை: பக்ரீத் பண்டிகையையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): நபிகள் நாயகத்தின் போதனைகளை மக்கள் அனைவரும் மனதில் நிறுத்தி வாழ்ந்தால், உலகில் அமைதி நிலவி, வளம் பெருகும்.

வைகோ (மதிமுக): சாதி, மொழி, இனம், தேசம் என்ற வரம்புகளை கடந்து ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற உணர்வுடன் அரபா பெருவெளியில் மக்கள் கடலாக சங்கமித்து, இஸ்லாமிய மக்கள் வழிபாடுகளில் ஈடுபடும் இந்த நன்னாளில் இஸ்லாமிய பெருமக்களுக்கு இதயமார்ந்த வாழ்த்துக்கள்.

ராமதாஸ் (பாமக): இறைவனுக்காக மகனையே பலியிட துணியும் அளவுக்கு இஸ்லாமியர்களுக்கு இறைபக்தி உண்டு என்பதையே இத்திருவிழா நினைவூட்டுகிறது. தியாகத்தை போற்றுவதே இத்திருநாளின் நோக்கமாகும்.

செல்வபெருந்தகை (காங்கிரஸ்): இணக்கமே இஸ்லாமின் இயல்பு. சமத்துவமே காங்கிரசின் சாரம். இரண்டும் சேர்ந்தால் தான் இந்தியா என்றும் நிறைவேறும். மனிதம் வாழட்டும் வேற்றுமை ஒழியட்டும், ஒற்றுமை ஓங்கட்டும் என கூறியுள்ளார். இதுபோல் அன்புமணி (பாமக), துரை வைகோ (மதிமுக), திருமாவளவன் (விசிக), ஓபிஎஸ், டிடிவி.தினகரன் (அமமுக), .ஜவாஹிருல்லா (மமக), தலைவர் காதர் மொகிதீன் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) உள்ளிட்ட பலர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

* முதல்வர் வாழ்த்து

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: தியாகத்தையும் பகிர்ந்துண்ணும் பண்பையும் போற்றும் பக்ரீத் திருநாளை கொண்டாடிடும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். இஸ்லாமியர்களின் இருபெரும் திருநாள்களில் ஒன்று பக்ரீத். புத்தாடை உடுத்தி, உணவினை வறியவர்க்கு ஒரு பகுதியையும், நண்பர்களுக்கு ஒரு பகுதியையும் பகிர்ந்தளித்து கொண்டாடும் பெருநாள். இஸ்லாமிய மக்களுக்காக இட ஒதுக்கீடு, கல்வி உதவித்தொகை, நங்கநல்லூரில் ஹஜ் இல்லம் என அவர்களின் சமூக - கல்வி - பொருளாதார மேம்பாடு மற்றும் உரிமைகளுக்காக தொடர்ந்து பணியாற்றும் சகோதர உணர்வோடு அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது பக்ரீத் நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.