பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் கருணை அடிப்படையில் 50 பேருக்கு பணி ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை: பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பினரின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைகளை உயர்த்துவதை சிறப்பு நோக்கமாகக் கொண்டு கலைஞர் 1969ம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககத்தையும், 1989ம் ஆண்டு மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககத்தையும், 2007ம் ஆண்டு சிறுபான்மையினர் நல இயக்ககத்தையும் ஏற்படுத்தினார். பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரின் கல்வி வளர்ச்சியில் கவனம் செலுத்தி, அம்மாணவ, மாணவியர் இடைநிற்றல் இன்றி கல்வி கற்றிட கல்வி உதவித் தொகை வழங்குதல், புதிய பள்ளி மற்றும் விடுதிக் கட்டிடங்கள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை இவ்வரசு செயல்படுத்தி வருகிறது. இதனால் சமூக நீதி கொள்கைகளை நிறுவுவதில் தமிழ்நாடு நாட்டிற்கே முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது. இந்த நிலையில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் பணிபுரிந்து பணியின்போது இயற்கை எய்திய பணியாளர்களின் 50 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் விடுதி சமையலர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.


