சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் உள்ள 642 அரசு மற்றும் தனியார் கல்வியியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டு இளநிலை கல்வியியல் ( பி.எட்) பட்டம் பெற்ற 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு ஓராண்டுக்கு மேலாகியும் தற்காலிகப் பட்டச்சான்றிழும், ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழும் வழங்கப்படவில்லை. இதனால் அவர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பட்டதாரி ஆசிரியர்களும், இடைநிலை ஆசிரியர்களும் நியமிக்கப்படவில்லை. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மட்டும் தான் அவ்வப்போது குறைந்த எண்ணிக்கையில் நியமிக்கப்பட்டு வருகின்றனர். உரிய காலத்தில் தற்காலிகப் பட்டச் சான்றிதழ்களையும், ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ்களையும் வழங்காததன் மூலம் அந்த பணிக்கான போட்டித் தேர்வுகளிலும் பி.எட் பட்டதாரிகளை பங்கேற்க விடாமல் தடுக்கிறது.
ஆசிரியர் பணிக்கான தேர்வுகளில் பங்கேற்க புதிய பி.எட் பட்டதாரிகள் அனுமதிக்கப்பட வேண்டும். அதற்கு வசதியாக அடுத்த இரு வாரங்களில் புதிய பி.எட் பட்டதாரிகளுக்கு தற்காலிகப் பட்டச்சான்றிழும், ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியலும் வழங்கப்படுவதை தமிழக அரசும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகமும் உறுதி செய்ய
வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.