புனே: புனேயில் உள்ள பிரபல நடிகை சங்கீதா பிஜ்லானியின் பண்ணை வீட்டில் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் நடிகை சங்கீதா பிஜ்லானி. இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் முன்னாள் மனைவியாக இருந்தவர். இவருக்கு மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம், மாவல் தாலுகாவில் உள்ள டிகோனா கிராமத்தில் பண்ணை வீடு உள்ளது. பாவ்னா அணைக்கு அருகே இந்த பண்ணை வீடு உள்ளத.
சங்கீதா பிஜ்லானியின் தந்தையின் உடல்நலக் குறைபாடு காரணமாக, கடந்த நான்கு மாதங்களாக அவரால் இந்தப் பண்ணை வீட்டிற்கு வர முடியவில்லை. இந்த நிலையில், பண்ணை வீடு பூட்டியே கிடந்துள்ளது. நேற்று முன்தினம் தனது இரண்டு பணிப்பெண்களுடன் சங்கீதா பிஜ்லானி பண்ணை வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு சென்றபோது, வீட்டின் பிரதான கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டிருந்தன; தொலைக்காட்சி பெட்டி காணாமல் போயிருந்தது; மற்றொன்று உடைக்கப்பட்டிருந்தது.
மேலும், வீட்டின் மேல் தளம் முழுவதும் சூறையாடப்பட்டிருந்தது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.