வேடசந்தூர் : ஆடி மாத கோயில் திருவிழாக்கள் நெருங்கும் நிலையில் அய்யலூரில் நடைபெற்ற சிறப்பு ஆட்டுச்சந்தையில் நேற்று ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு ஆடு, கோழிகள் விற்பனையானது.
திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆடு, கோழி சந்தை நடப்பது வழக்கம். இங்கு திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து ஆடு, கோழிகளை ஆர்வமுடன் வாங்கி செல்வர்.
வரும் ஆடி, ஆவணி மாதங்களில் கிராமங்களில் கோயில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதனால் அய்யலூரில் நேற்று காலை நடைபெற்ற சிறப்பு ஆட்டுச்சந்தை களைகட்டியது. அதிகாலை முதலே ஏராளமான கால்நடை வளர்ப்போரும், வியாபாரிகளும் குவிந்தனர். வியாபாரிகள் போட்டி போட்டு கொண்டு ஆடு, கோழிகளை வாங்கி வாகனங்களில் ஏற்றி சென்றனர்.
10 கிலோ வெள்ளாடு தரத்துக்கேற்ப ரூ.7,000 முதல் ரூ.8,000 வரையிலும், செம்மறி ஆடு ரூ.6,500 முதல் ரூ.7,000 வரையிலும் விற்கப்பட்டது. ஒரு கிலோ எடையுள்ள நாட்டுக்கோழி ரூ.450 முதல் ரூ.550 வரையிலும், சண்டை சேவல்கள் ரூ.15 ஆயிரம் வரையிலும் விற்கப்பட்டது.
நேற்று ஒரே நாளில் மொத்தம் ரூ.2 கோடிக்கு ஆடு, கோழிகள் விற்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில், ‘`ஆடி, ஆவணி மாதங்களில் கிராமப்புறங்களில் கோயில் திருவிழாக்கள் அதிகளவில் நடைபெறுவது வழக்கம். இதனால் நேற்று சந்தை களைகட்டியது. வரும் வாரங்களில் சந்தையில் விற்பனை மேலும் சூடு பிடிக்கும்’’ என்றனர்.