அயோத்தி: அயோத்தியில் ஸ்ரீராம் ஜன்ம பூமி தளத்தில் அனைத்து கோயில் கட்டுமான பணிகளும் நிறைவடைந்துள்ளதாக ஸ்ரீராம் ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேசம் அயோத்தில் உள்ள ஸ்ரீராம் ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில்,\\” ஸ்ரீராமின் அனைத்து பக்தர்களுக்கும் கோயில் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளதாக மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். பிரபு ஸ்ரீராம் லல்லாவின் பிரதான சன்னதி உட்பட அனைத்து கோயில் கட்டுமான பணிகளும் நிறைவடைந்துள்ளது.
மகாதேவ், விநாயகர், ஹனுமான், சூர்யதேவ், பகவதியம்மன் மற்றும் அன்னபூரணி ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரதான ராமர் கோயில் வளாகத்தில் உள்ள ஆறு கோயில்கள் மற்றும் பிற சேஷாவதாரம் மந்தீர் ஆகியவை முடிக்கப்பட்ட கட்டுமானங்களில் அடங்கும். இந்த கோயில்களில் கொடிமரம் மற்றும் கலசம் நிறுவப்பட்டுள்ளது. வால்மீகி, வசிஷ்டர், விஸ்வாமித்திரரர், அகத்தியர், நிஷாத்ராஜ், ஷபரி மற்றும் தேவி அகல்யா ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட 7 மண்டபங்களும் முழுமையாக கட்டப்பட்டுள்ளன.சாந்த் துளசிதாஸ் மந்திரும் நிறைவடைந்துள்ளது. மேலும் ஜடாயு மற்றும் அணில் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.\\” என்று குறிப்பிட்டுள்ளது.
