Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரூ.1800 கோடி செலவில் கட்டப்பட்ட அயோத்தி ராமர் கோவில் கருவறை மண்டப கூரை ஒழுகுகிறது: ஒரு நாள் மழைக்கே தாக்கு பிடிக்கவில்லை தலைமை பூசாரி பரபரப்பு

அயோத்தி: ரூ.1800 கோடி செலவில் கட்டப்பட்டு பிரதமர் மோடியால் கடந்த ஜனவரி மாதம் திறந்து வைக்கப்பட்ட அயோத்தி ராமர் கோயில் கருவறை மண்டபத்தின் கூரை முதல் மழைக்கே ஒழுகியது. அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோயிலை ரூ.1800 கோடி செலவில் கட்டி அதை கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மோடி திறந்தார். இந்த நிலையில் உ.பியில் பருவமழை துவங்கி உள்ளது. கடந்த சனிக்கிழமை அயோத்தியில் கன மழை பெய்தது. முதல் மழைக்கே அயோத்தி ராமர் கோயிலின் கருவறை மண்டபத்தின் கூரையில் ஒழுகியது.

இது குறித்து ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் நிருபர்களிடம் கூறுகையில், சனிக்கிழமை நள்ளிரவில் பெய்த முதல் கனமழையில் கோயிலின் கருவறையின் மேற்கூரையில் இருந்து நீர் கசிவு ஏற்பட்டது. குழந்தை ராமர் சிலைக்கு முன் பூசாரி அமர்ந்திருக்கும் இடத்துக்கும், விஐபி தரிசனத்துக்கு மக்கள் வரும் இடத்துக்கும் நேரடியாக மேற்கூரையில் இருந்து மழைநீர் கசிந்தது. ஜனவரி 22ம் தேதி கோவில் திறப்பு விழா நடந்தது. ஆனால், ஒரு நாள் மழைக்கே கூரை ஒழுகுவது சரியல்ல. கோவில் வளாகத்தில் இருந்து மழைநீர் வெளியேறுவதற்கு எந்த ஏற்பாடும் இல்லை என்றார். அயோத்தியில் ராம்பத் சாலை மற்றும் புதிதாக கட்டப்பட்ட பிற சாலைகள் சில இடங்களில் மண்ணில் புதைந்தன.

இதற்கிடையில், உத்தரப்பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் வெளியிட்ட அறிக்கையில், ‘‘தியாகிகளின் சவப்பெட்டியாக இருந்தாலும் சரி, கடவுள் கோவிலாக இருந்தாலும் சரி, இவை அனைத்தும் பா.ஜ.க.வுக்கு ஊழலுக்கான வாய்ப்பாகிவிட்டன. நாட்டில் உள்ள நம்பிக்கை மற்றும் தூய்மையின் சின்னங்கள் கூட அவர்களுக்கு கொள்ளையடிக்கும் வாய்ப்புகள் தான்” என்று கூறியுள்ளார்.