சென்னை: ஆவடி காவல் ஆணையரகம் சார்பில், போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் டிஜிபி சங்கர் ஜிவால் பங்கேற்றார். தமிழ்நாடு முதல்வரின் ‘போதை இல்லா தமிழ்நாடு’ என்ற கோட்பாட்டை வலியுறுத்தி ஆவடி காவல் ஆணையர் சங்கர் பல்வேறு போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலம் செயல்படுத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக, ஆவடி காவல் ஆணையரகம் மற்றும் ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இணைந்து பள்ளி மாணவர்கள் பங்கேற்ற உலக சாதனை உருவாக்கும் ‘மாபெரும் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி’ ஆவடி காவல் ஆணையர் சங்கர் ஏற்பாட்டில் ஆவடி ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் தலைமை வகித்தார். ‘சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வி துறை செயலாளர் ஜெ.குமரகுருபரன், திருவள்ளுர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டனர்.
விழிப்புணர்வு நிகழ்ச்சியில், 126 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 3397 மாணவர்கள் கலந்துகொண்டு ‘எனக்கு வேண்டாம் போதை, நமக்கும் வேண்டாம் போதை’ என்ற வாசகம்போல நின்று சங்கர் ஜிவால் முன்னிலையில் உறுதிமொழி ஏற்றனர்.
இது, உலக சாதனை உருவாக்கும் நிகழ்ச்சியாக ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற தனியார் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டது. பின்னர், டிஜிபி சங்கர் ஜிவால் கூறுகையில், ‘3200 மாணவர்கள் மூலம் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. போதைப்பொருட்கள் சப்ளை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதேபோல், ஐ.இ.சி., எனப்படும் தகவல், கல்வி மற்றும் தகவல் பரிமாற்றம் மூலம் பள்ளி, கல்லூரி, ஐ.டி., ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். நேற்று நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, சுமார் 1.5 லட்சம் பொதுமக்களை சேரும் என்று நம்புகிறோம். தென் மாநிலங்களை பொறுத்தவரை தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் தடுப்பு நடவடிக்கை தொடர்ந்து சிறப்பாக நடந்து வருகிறது. விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போது, போதைப்பொருள் பழக்கங்கள் முன் இருந்ததை விட குறைவாகவே உள்ளது. ஆந்திரா, ஒடிசா, அசாம் மாநிலங்களில் இருந்து போதைப்பொருட்கள் தமிழ்நாட்டிற்கு கடத்தி வரும் நபர்களை கைது செய்து வருகிறோம்’’ என்றார். நிகழ்ச்சியில், ஆவடி காவல் ஆணையரக கூடுதல் ஆணையர் ராஜேந்திரன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.