Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு வருவதை தவிர்க்கவும்: 23ம் தேதி வரை கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

சென்னை: மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளுக்கு 23ம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் கோடை வாசஸ்தலங்களுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து வருவாய் பேரிடர் மேலாண்மை துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மார்ச் மாதம் முதல் மே மாதம் முடிய உள்ள கோடை காலத்தில் தமிழ்நாட்டிற்கு 12.5 செ.மீ. மழை இயல்பாக கிடைத்துள்ளது. இந்த ஆண்டு 1.3.2024 முதல் 19.5.2024 முடிய 8.44 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 17 சதவீதம் குறைவாகும்.

நேற்று காலை 8.30 மணி வரை தமிழ்நாட்டில் 36 மாவட்டங்களில் சராசரியாக 1.02 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதிகப்படியாக திண்டுக்கல் மாவட்டத்தில் 3.20 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தூத்துக்குடி மற்றும் சேலம் மாவட்டங்களில் இடி, மின்னல் தாக்கியதன் காரணமாக இரண்டு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. கனமழையின் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 14 கால்நடை இறந்துள்ளதோடு, 7 குடிசைகள், வீடுகள் சேதமடைந்துள்ளன.

இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த 19ம் தேதி வெளியிட்ட அறிவிக்கையில், 23ம் தேதி (நாளை மறுதினம்) வரை பல்வேறு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ள நிலையில், பேரிடர் சூழலை திறம்பட கையாள்வதற்கு வழங்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறையினை பின்பற்றி, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், குமரிக் கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை அடுத்துள்ள தென் தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 65 கி.மீ. வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்சொன்ன பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக இருக்கும் பொருட்டு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி,

திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள 2.66 கோடி செல்பேசிகளுக்கு பொதுவான எச்சரிக்கை நடைமுறை (Common Alert Protocol) மூலம் 18.05.2024 மற்றும் 19.05.2024 ஆகிய நாட்களில் எச்சரிக்கை குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன. கன மழை எச்சரிக்கையை தொடர்ந்து, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையைச் சார்ந்த 296 வீரர்கள் அடங்கிய 10 குழுக்கள், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.