கோவை: அவிநாசி புதுப்பெண் தற்கொலை செய்த வழக்கில் விசாரணை அதிகாரியை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி பெண்ணின் தந்தை கோவை ஐஜி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எனது மகள் ரிதன்யா தற்கொலை வழக்கில் சரியான பிரிவில் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பது குறித்து மனு கொடுத்துள்ளேன். வழக்கை தீவிரமாக விசாரிப்பதாக தெரிவித்தனர். வழக்கு தொய்வாக செல்வதால், விசாரணை அதிகாரி மீது சந்தேகம் வருகிறது.
எனவே, தனி விசாரணை அதிகாரி வேண்டும், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என வேண்டுகோளும் விடுத்துள்ளேன். நாங்கள் ரிதன்யாவிற்கு கொடுத்த நகையை இன்னும் எங்களுக்கு தரவில்லை. ஆதாரங்கள் திரட்டி விட்டு நீதிமன்றம் மூலமாக எங்களுக்கு தருவதாக தெரிவித்துள்ளார்கள். ரிதன்யா தற்கொலை சம்பவம் போன்று இந்தியாவில் எங்கும் நடக்கக்கூடாது. 27 வயது பெண்ணை சமூக வலைதளங்களில் தவறாக சித்தரிப்பது வேதனை அளிக்கிறது. உங்கள் வீட்டு குடும்பம், தங்கச்சியாக இருந்தால் இப்படி சமூக வலைதளங்களில் போடுவீர்களா? சரியான தகவலை போடுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.


