ஆவடி: ஆவடியில் புதிய சார் பதிவாளர் அலுவலகத்தில் அடிப்படை வசதி இல்லை என பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.ஆவடியில் சார் பதிவாளர் அலுவலகத்தில், ஆவடி மாநகராட்சியை சுற்றியுள்ள திருநின்றவூர் நகராட்சி, வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் பூந்தமல்லி நகராட்சியை சேர்ந்த 33 வருவாய் கிராமங்களின் பத்திரப்பதிவு நடந்து வருகின்றன. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆணைக்கு இணங்க, தனியார் கட்டிடத்தில் இருந்து சார் பதிவாளர் அலுவலகத்தை மாற்ற முடிவு செய்து, ஆவடி அருகே பருத்திப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகம் பின்புறமுள்ள அரசு நிலத்தில் 1.68 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 அடுக்கு கொண்ட கட்டிடம் 1625 சதுர அடியில் கட்டப்பட்டது.
இதையடுத்து திறப்பு விழா நடத்தப்பட்டு, பட்டாபிராம் மாடர்ன் சிட்டி பகுதியில் தனியார் கட்டிடத்தில் செயல்பட்டு வந்த சார்பதிவாளர் அலுவலகம் அலுவலகம் புதிய கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது. நேற்று பத்திரப்பதிவு தொடங்கியது. பத்திரப்பதிவு தொடங்கிய முதல் நாளே ஆடிப்பூரம் என்பதால் ஏராளமான பொதுமக்கள் பத்திரப்பதிவு செய்ய வந்திருந்தனர்.
ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்தில் நாள்தோறும் சராசரியாக 100 பத்திரப்பதிவுகள் நடைபெறுகின்றன. முகூர்த்த நாட்களில் 200 பத்திரப்பதிவுகள் வரை நடக்கிறது. இவ்வளவு பத்திரப்பதிவு நடைபெறும் சார்பதிவாளர் அலுவலகத்தில் குடிநீர், கழிவறை, இருக்கை, வாகன நிறுத்தம் போன்ற அடிப்படை வசதி இல்லை; மேலும் வெயில், மழை காலங்களில் நிற்பதற்குகூட இடமே இல்லாமல் அவதிப்படும் சூழல் உள்ளது என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, அடிப்படை வசதிகள், வாகன நிறுத்தம் போன்றவற்றை விரைவாக செய்து தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.


