Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஆவடி-ஸ்ரீபெரும்புதூர்-கூடுவாஞ்சேரி ரயில் வழித்தடத்திற்கான பணிகள் மும்முரம்: இறுதிகட்ட ஆய்வு நடப்பதாக தகவல்

சென்னை: ஆவடி-ஸ்ரீபெரும்புதூர்-கூடுவாஞ்சேரி ரயில் வழித்தடத்திற்கான இறுதிகட்ட ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2025-26ம் நிதியாண்டில் ஒன்றிய அரசு தமிழக ரயில்வே திட்டங்களுக்கென ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருந்தது. இதில் ரூ.2,948 கோடி மதிப்பீட்டில் 77 ரயில் நிலையங்களில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. தமிழகத்தில் மொத்தமாக 2,587 கி.மீ நீளத்திற்கு புதிய தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் ரூ.33.467 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் 10 புதிய ரயில் பாதை திட்டங்கள், 3 அகல பாதை திட்டங்கள் மற்றும் 9 இரட்டை வழி பாதை திட்டங்களுக்கு கணிசமான நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இவற்றில் புதிய ரயில் பாதைக்கு ரூ.246 கோடியும், அகலப் பாதை திட்டத்திற்கு ரூ.478 கோடியும், இரட்டை வழி பாதைக்கு ரூ.812 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதேநேரம் தமிழகத்தில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள புதிய ரயில் பாதை திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. 2024ம் ஆண்டில் 222 கோடியாக இருந்த ஒதுக்கீடு, இந்த ஆண்டு 395.4 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக 9 முக்கிய திட்டங்கள் மீண்டும் புத்துயிர் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மாமல்லபுரம் வழியாக சென்னையை கடலூருடன் இணைக்கும் ரயில் இணைப்பு, ஸ்ரீபெரும்புதூர்-ஆவடி-கூடுவாஞ்சேரி ரயில் பாதை மற்றும் திண்டிவனம் முதல் திருவண்ணாமலை வரையிலான ரயில் இணைப்பு ஆகிய பாதைகளும் அடங்கும். பல ஆண்டுகளாக, இந்த பாதைகள் அமைக்கப்படுவதில் இழுபறியில் இருந்து வந்தன. இதனால் ரயில்வே வாரியம் ரூ.1,000 நிதியை மட்டும் ஒதுக்கி திட்டத்தை உயிருடன் வைத்திருந்தது.

அதாவது தொழில்நுட்ப ரீதியாக அவற்றைக் கிடப்பில் போடவில்லை. ஆனால் அந்த வழித்தடங்களில் எந்த பணியும் இல்லாமல் நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியில் கிட்டத்தட்ட 90% திண்டிவனம்-நகரி மற்றும் தர்மபுரி-மொரப்பூர் வழித்தடங்களுக்கு மட்டுமே சென்றது. இதில் சில திட்டங்கள் முதன்முதலில் 2007ல் அறிவிக்கப்பட்டவை ஆகும். தாம்பரத்தைச் சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன், ஆர்டிஐ மூலம் விரிவான விவரங்களை பெற்றார். அவருக்கு கிடைத்த தகவலின் படி, மதுரை-தூத்துக்குடி அருப்புக்கோட்டை (143 கி.மீ) வழித்தடத்திற்கு ரூ.55 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டை விட 3 மடங்கு அதிகம் ஆகும். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக காகிதத்தில் மட்டுமே இருந்த நீண்ட காலமாக தாமதமான ஈரோடு-பழனி புதிய பாதைக்கு ரூ.50 கோடி வழங்கப்பட்டது. மாமல்லபுரம் வழியாக சென்னை-கடலூர் புதிய பாதைக்கும் ரூ.52.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வடசென்னை முதல் புத்தூர் வரையிலான புதிய ரயில் பாதைக்கு ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காட்பாடி-விழுப்புரம் (160 கி.மீ) பிரிவுக்கு ரூ.200 கோடியும், சேலம்-கரூர்-திண்டுக்கல் (160 கி.மீ) மற்றும் ஈரோடு-கரூர் (65 கி.மீ) பாதைகளுக்கு தலா ரூ.100 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

மதுரை-தூத்துக்குடி ரயில் திட்டத்திற்கு 55 கோடி ஒதுக்கப்பட்டாலும், நிலம் கையகப்படுத்துதலுக்காக தூத்துக்குடி மாவட்டம் மட்டும் ரூ.15 கோடி ரூபாய் தேவைப்படுகிறது என்றும், இந்த முழு திட்டத்திற்கும் 55 கோடி எப்படி போதுமானதாக இருக்கும் என்றும் கேள்வி எழுந்துள்ளது. இதேபோல், திண்டிவனம்-திருவண்ணாமலை திட்டத்திற்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 35 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த குறைந்தபட்சம் ரூ. 95 கோடி தேவை என்றும், அதே நேரத்தில் 2025 பட்ஜெட்டில் 42.7 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நீண்ட காலமாக தாமதமாகி வந்த 184.45 கி.மீ. நகரி-திண்டிவனம் பாதைக்கான நிலம் கையகப்படுத்தல் நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. அடுத்ததாக ஆவடி-ஸ்ரீபெரும்புதூர்-கூடுவாஞ்சேரி வழித்தடத்திற்கான இறுதி ஆய்வுகள் நடந்து வருகின்றன. நிலுவையில் உள்ள நடைமுறை அனுமதிகள் கிடைத்தவுடன் ரயில் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

* சர்ச்சையாக மாறிய ஒன்றிய அமைச்சரின் பதில்

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தமிழ்நாடு அரசு எதிர்த்ததால் மதுரை-தூத்துக்குடி ரயில் திட்டம் கிடப்பில் போடப்பட்டதாகத் தவறாகக் கூறியதைத் தொடர்ந்து இந்த திட்டம் சர்ச்சைக்குரியதாக மாறியிருந்தது. மாநில போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரின் மறுப்பைத் தொடர்ந்து, பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு பத்திரிகையாளர் அந்தக் கேள்வியை தவறாக கேட்டதாக அஸ்வினி வைஷ்ணவ் அடுத்த சில நாளில் தெளிவுபடுத்தினார்.