சென்னை: பொது இடத்தில் ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த சினேகா மோகன்தாஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழர் முன்ேனற்றப்படை தலைவர் வீரலட்சுமி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: நான் அமைப்புச்சாரா மற்றும் கட்டுமான பொழிலாளர் சங்கத்திற்கு 6 ஆண்டுகளாக தலைவராக இருந்தேன்.
ஆட்டோ ஓட்டுநர் தொழிலாளர்களின் மேம்பாட்டிற்காக 10 ஆண்டுகளாக பாடுபட்டு வருகிறேன். தமிழகத்தில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்கின்றனர். ஒரு ஆட்டோ ஓட்டும் தொழிலாளியை இப்படி பொது வெளியில் செருப்பால் அடிப்பது அந்த ஆட்டோ ஓட்டுநர்களை இழிவு செய்வது போல் உள்ளது. பொதுவாக ஆட்டோ தொழிலாளர்கள் சமூக அக்கறை உள்ளவர்கள், இந்த சம்பவத்தால் பொது மக்களுக்கும் அவர்கள் மீது அவநம்பிக்கை ஏற்படும்.
வெறும் விளம்பரத்திற்காக மட்டுமே மக்கள் நீதி மய்ய மகளிர் அணி பொருளாளர் சினேகா மோகன்தாஸ் மற்றும் அவருடன் வந்தவர்கள், அந்த அப்பாவி ஆட்டோ ஓட்டுநர் பிரசாத் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் எங்களை போன்றவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.
எனவே ஆட்டோ ஓட்டுநர் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும். ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய 3 பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார். இதற்கிடையே ஆட்டோ டிரைவர் பிரசாத் அளித்த புகாரின்படி, செருப்பால் தாக்கிய சினேகா மோகன்தாஸ் மீது மயிலாப்பூர் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.