Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

எனக்கு தான் முழு அதிகாரம் முதுமையின் காரணமாக ராமதாஸ் ஒரு குழந்தை போல மாறி விட்டார்: அன்புமணி பரபரப்பு பேச்சு

சென்னை: முதுமையின் காரணமாக ராமதாஸ் ஒரு குழந்தை போல மாறிவிட்டார். அவர் பேசுவது எல்லாம் பொய் என அன்புமணி பரபரப்பாக பேசினார். பாமக சமூக ஊடகப்பிரிவு கூட்டம் சென்னை அடுத்த பனையூரில் நேற்று நடந்தது. இதில் அன்புமணி பேசியதாவது: திமுக தான் பாமகவுக்கு எதிரி. திமுகவுக்கு எதிராக பிரசாரம் செய்ய வேண்டும். விசிகவுக்கும், காங்கிரசுக்கும் ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏன் வந்தது? இது குறித்து எல்லாம் யோசிக்க வேண்டும்.

கடந்த 5 ஆண்டுகளாக ராமதாஸ் ஐயாவாக இல்லை. வயது முதிர்வின் காரணமாக அவர் குழந்தை போல் மாறிவிட்டார். அவருடன் இருக்கும் 3 பேர் தங்கள் சுயலாபத்துக்காக, அவரை பயன்படுத்திக் கொள்கின்றனர். அது தெரிந்த பிறகுதான் நான் தலைவராக ஒப்புக்கொண்டேன். அவரை யாரும் சமூக ஊடகங்களில் விமர்சனம் செய்யக் கூடாது. அவர் சொல்லிதான் பாஜவுடன் 2024ல் கூட்டணி பேசினேன். அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தைலாபுரம் தோட்டம் வந்து சென்றபோது, அவர் எதற்காக வந்தார் என்று நான் அவரிடம் கேட்டதற்கு, அவர் பத்திரிகை வைக்க வந்து சென்றதாக என்னிடம் தெரிவித்தார்.

அதிமுகவுடன்தான் கூட்டணி வைக்க வேண்டும் என்று அப்போதே என்னிடம் சொல்லி இருந்தால் நான் ஏன் வேண்டாம் என சொல்ல போகிறேன். அவர் சரி என்று சொல்லியதால்தான் பாஜவினர் தைலாபுரம் வீட்டுக்கு வந்தனர். கட்சியில் முழு அதிகாரம் எனக்கு தான். 99 சதவீத கட்சியினரும் நம்மிடம் தான் உள்ளனர். கொள்ளை அடிப்பவனுக்கும், கொலை செய்பவனுக்கும் ராமதாஸ் பொறுப்பு வழங்குகிறார். ஆனால் அது அவரின் சிந்தனையில் நடைபெறுவது அல்ல. காலையில் இலந்தைப் பழம் விற்பவரை கூட்டிவந்து பொறுப்பு கொடுக்கப்படுகிறது, போடுங்கள் என்றால் கையெழுத்து போடுகிறார்.

இதிலிருந்து ராமதாசின் சிந்தனைப்படி இது நடைபெறவில்லை என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். 36 வயதில் ஒருவரை பொதுச் செயலாளராக நியமித்தார்கள். கட்சி தொடங்கி 36 ஆண்டுகள் ஆகிறது. கட்சி சட்ட விதிகளின்படி பொதுக்குழுவை, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வழிகாட்டுதலின்படி கூட்ட வேண்டும் என்றுதான் உள்ளது. ஆனால், அதிகாரம் மிக்கவர் நிறுவனர் என்று சட்டவிதி கிடையாது. கட்சியின் பொதுக்குழுவை நடத்துவதற்கும், கட்சியை நடத்துவதற்கும் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய மூவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

ராமதாஸ் பேட்டியில் பேசுவது அத்தனையும் பொய். தினமும் நிம்மதி இல்லாமல், தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். பெற்ற மகனையும், மருமகளையும் யாராவது ஊரின் முன்னால் நேரலையில் பேசுவார்களா? வீட்டுக்கு வந்த மருமகளை பொது வெளியில் யாராவது விமர்சனம் செய்வார்களா? உங்கள் மனைவியை யாராவது திட்டினால் உங்களுக்கு கோபம் வராதா? எனது மனைவி பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர். ராமதாஸ் முன்பு போல் இல்லை.

அப்படி இருந்திருந்தால், அப்படி பேசி இருப்பாரா? நான் பேசாமல் இருப்பதால், அவர்களுடைய கருத்து மட்டுமே மேலோங்குவது போல தோன்றுகிறது. தெளிவுக்காக காத்திருந்தேன். உண்மையை என்னால் ஒவ்வொரு முறையும் பேச முடியும். நரேந்திர மோடி, அமித் ஷா, சோனியா காந்தி, கருணாநிதி, ஜெயலலிதா, பழனிசாமி ஆகியோருடன் கூட்டணி பேசியிருக்கிறேன். யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று ராமதாஸ் சொல்கிறாரோ அவருடன் எல்லாம் இத்தனை ஆண்டுகளாக நான் கூட்டணியை பேசி முடித்தவன். பாஜவுடன் கூட்டணி வைக்க சொன்னதால் தான் கூட்டணி பேசி முடித்தேன்.

ஆனால் அதிமுகவுடன் கூட்டணி வைக்க சொன்னதாக அவர் பேசியது பொய். பாஜ எனக்கு மாமனா, மச்சானா... அவர்களுடன் தான் கூட்டணி வைப்பேன் என்று நான் சொல்வதற்கு. 25 ஆண்டுகளாக நான்தான் கூட்டணி பேசி வருகிறேன். அதிமுகவுடன் கூட்டணி பேச வேண்டும் என்று சொன்னால் நான் அப்போதே பேசி இருப்பேன். அவர்தான் பாஜவுடன் பேச சொன்னார். எல்லாம் பேசி முடித்து கூட்டணி எல்லாம் நிறைவடைந்த பிறகு அதிமுகவுடன் பேச்சுவார்த்தை எனக்கே தெரியாமல் நடைபெற்றது. இவ்வாறு அன்புமணி பேசினார்.