அடிலெய்ட்: ஆஸ்திரேலியாவில் அனல் பறக்கும் வெயில் வாட்டி வரும் சூழ்நிலையில், அங்கு கிரிக்கெட் ஆடிய பாகிஸ்தான் வம்சாவளி வீரர் ஒருவர், வெயிலில் சுருண்டு விழுந்து மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில், பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த ஜுனைல் ஜாபர் கான் (40) வசித்து வந்தார். இவர் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வந்தார். இந்நிலையில், பிரின்ஸ் ஆல்ப்ரட் ஓல்ட் காலேஜியன் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் ஓல்ட் கான்கார்டியன் கிரிக்கெட் கிளப்பிற்காக ஜுனைத் நேற்று முன்தினம் ஆடினார்.
காலை முழுவதும் பீல்டிங்கில் ஈடுபட்ட பின்னர், பிற்பகல் 4 மணிக்கு பேட்டிங் செய்தார் ஜுனைத். அப்போது 40 டிகிரி வெயில் அனல் பறந்த நிலையில், சிறிது நேரத்தில் அவர் சுருண்டு விழுந்தார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் ஆஸி கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அடிலெய்ட் கிரிக்கெட் சங்க விதிகள்படி, 42 டிகிரி செல்சியசுக்கு அதிகமாக வெப்பம் இருந்தால் போட்டி நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.