Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மேகாலயாவில் கொடூரம்: ஹனிமூன் சென்ற புதுமாப்பிள்ளை படுகொலை; புதுப்பெண் மாயம்; திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

ஷில்லாங்: மேகாலயாவிற்கு ஹனிமூன் சென்ற புதுமாப்பிள்ளை படுகொலை செய்யப்பட்டார். அவரது மனைவியை காணவில்லை. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி என்பவருக்கு, சோனம் என்ற பெண்ணுடன் கடந்த மே மாதம் 11 ஆம் தேதி காதல் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து புதுமணத் தம்பதியினர், மேகாலயா மாநிலத்துக்கு ஹனிமூன் சென்றுள்ளனர். தலைநகர் ஷில்லாங்கில் ஸ்கூட்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்த அவர்கள் அங்கிருந்து சிரபுஞ்சிக்கு சென்றுள்ளனர்.

அங்கு உற்சாகமாக சுற்றிப்பார்த்தவர்கள் மே மாதம் 24 ஆம் தேதி, நோங்கிரியாட் கிராமத்தில் தங்கியிருந்த விடுதியை காலி செய்துவிட்டு திரும்பியுள்ளனர். இதையடுத்து, இருவரின் செல்போனுக்கும் குடும்பத்தினர் அழைத்தபோது தொடர்புகொள்ள முடியாமல் போனதால் 8 நாட்களுக்குப் பின் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. புகாரின்பேரில் புதுமணத் தம்பதியை நோங்கிரியாட் பள்ளத்தாக்கு முழுவதும் போலீசார் தேடினர். அப்போது, அவர்கள் தங்கியிருந்த விடுதியில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில், இளைஞர் ஒருவரின் உடல் பாதி அழுகிய நிலையில் ஜூன் 2ஆம் தேதி கிடந்துள்ளது. 30 வயதான அந்த நபரின் கையில் ராஜா என டாட்டூ குத்தப்பட்டிருந்தது. அதன் மூலம் அது புதுமாப்பிள்ளை ராஜா ரகுவன்ஷி என்பதை குடும்பத்தினர் உறுதி செய்தனர். மேலும், உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் பெண் ஒருவரின் வெள்ளை நிற ஆடை, உடைத்துபோன செல்போன் கவர், மாத்திரைகளும் கிடந்துள்ளன.

இதையடுத்து, ராஜா ரகுவன்ஷி மரணம் குறித்து கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், அவரின் மனைவி சோனமை தொடர்ந்து தேடி வருகின்றனர். இதனிடையே, தங்கும் விடுதி ஊழியர்கள், வாடகைக்கு பைக் கொடுத்தவர்கள் மற்றும் சுற்றுலா ஏஜென்ட்கள் மீது சந்தேகம் உள்ளதாக குடும்பத்தினர் கூறியுள்ளனர். விடுதியை காலி செய்த சிறிது நேரத்தில் புதுமணத் தம்பதி மாயமானதால், இவர்கள் தான் ஏதாவது செய்திருக்கலாம் எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.அதன் அடிப்படையில் தங்கும் விடுதி ஊழியர்கள் உட்பட பலரையும் பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராஜா ரகுவன்ஷியின் உடல் பிரேதபரிசோதனைக்கு பிறகு இந்தூருக்கு கொண்டு செல்லப்படுகிறது. அழுகிய நிலையில் இருப்பதால் மேகாலயாவில் தகனம் செய்ய போலீசார் வற்புறுத்திய போது, அதற்கு ராஜாவின் பெற்றோர் மறுத்து விட்டனர். இந்த கொடூர சம்பவம் மேகாலயாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கொலைக்கு பயன்படுத்திய புதிய அரிவாள் பறிமுதல்

தேனிலவு சென்ற புதுமாப்பிள்ளை ராஜா ரகுவன்ஷி உடல் ​​வெய்சாடோங்கின் பள்ளத்தாக்கில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. அவர் புதிய அரிவாள் மூலம் வெட்டிக்கொல்லப்பட்டது தெரிய வந்தது. அதை போலீசார் மீட்டுள்ளனர். இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே சடலம் கிடந்த இடத்தில் இருந்து 25 கி.மீ தூரத்தில் அவர்கள் வந்த வாடகை ஸ்கூட்டர் கிடைத்தது. மேலும், தம்பதி பயன்படுத்திய மழைக்கோட்டும் வனப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

டிரோன் மூலம் சடலம் கண்டுபிடிப்பு

புதுமாப்பிள்ளை ராஜா உடல் ரியாத் அர்லியாங் வாகன நிறுத்துமிடத்தில் உள்ள வெய் சாவ்டாங் நீர்வீழ்ச்சிக்கு கீழே உள்ள ஆழமான பள்ளத்தாக்கில் கிடந்தது. டிரோன் மூலம் ஆய்வு செய்த போது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொலையில் சில உள்ளூர்வாசிகள் மீது குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். ஆனால் உள்ளூர்வாசிகள் அனைவரும் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் தொடர்பு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் எஸ்பி விவேக் சையம் கூறினார். அவர் கூறுகையில்,’தம்பதியர் ஒரு பெண் காபி விற்பனையாளருடன் தகராறு செய்தது உண்மைதான். ஆனால் அவரோ அல்லது மற்ற உள்ளூர் விற்பனையாளர்களோ இந்தக் கொலையை இவ்வளவு கவனமாகத் திட்டமிட்டிருக்க வாய்ப்பில்லை’ என்றார். ஆனால் ராஜாவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட அந்த பள்ளத்தாக்கு பகுதியைப் பற்றி அறிமுகமில்லாத ஒருவர் அந்த இடத்தை அடைவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று குடும்பத்தினர் வாதிடுகின்றனர். இந்தப் பகுதி இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டு, வாகன நிறுத்துமிடத்தைச் சுற்றி ஒரு எல்லைச் சுவர் உள்ளது. எனவே ராஜா ரகுவன்ஷி முதலில் கொல்லப்பட்டு அதன்பின் பள்ளத்தாக்கில் வீசப்பட்டதாகத் தெரிகிறது என்று அவரது சகோதரர் விபின் கூறினார்.

நான் நோன்பை விடமாட்டேன் மாமியாரிடம் சோனம் பேச்சு

புதுமணத்தம்பதி மாயமாகும் முன் ராஜாவின் தாயார் சோனமுடன் கடைசியாக பேசினார். மே 23 ஆம் தேதி நோன்பு நாள். இருப்பினும் புதுமணப்பெண் என்பதால் ேசானத்தை அவர் சாப்பிட சொன்னார். ஆனால் நான் என் நோன்பை கைவிட மாட்டேன் என்று சோனம் தெரிவித்துள்ளார். அப்போது மாமியாரிடம், நீர்வீழ்ச்சியைப் பார்க்க காட்டில் மலையேறிக் கொண்டிருந்ததாகக் கூறினார். அந்த நேரத்தில் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதன்பின் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.

சிபிஐ விசாரணை வேண்டும் ராணுவம் தேட வேண்டும்

புதுமாப்பிள்ளை ராஜா ரகுவன்ஷி கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மாயமாகி உள்ள புதுப்பெண் சோனமைத் தேடும் பணியை ராணுவம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரினர். இந்த கோரிக்கை குறித்து கிழக்கு காசி ஹில்ஸ் எஸ்பி விவேக் சையம் கூறுகையில்,’குற்றவாளிகளைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்டவரின் மொபைலும் கண்டுபிடிக்கப்பட்டது. ராஜாவின் மரணம் பள்ளத்தாக்கில் விழுவதற்கு முன் அல்லது பின் நடந்ததா என்பதை தீர்மானிக்க பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம். கொள்ளை, பழிவாங்கும் நடவடிக்கையாக கூட இந்த கொலை நடந்து இருக்கலாம். இதை கண்டுபிடிக்க கூடுதல் ஆதாரங்களை திரட்ட வேண்டும். முதலில் மாயமாகி உள்ள சோனத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது’ என்றார்.