சண்டிகார்: இந்திய தடகள கூட்டமைப்பின் புதிய தலைவராக பகதுார் சிங் சாகூ நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய தடகள கூட்டமைப்பின் (ஏஎப்ஐ) ஆண்டு பொதுக் குழு கூட்டம் சண்டிகாரில் நேற்று நடந்தது. இதன் தற்போதைய தலைவர் அடில்லி சுமாரிவாலா ஓய்வு பெறுவதை அடுத்து புதிய தலைவராக பகதுார் சிங் சாகூ (51) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர், கடந்த 2002ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டின்போது குண்டு எறியும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர். தவிர, 2000ல் சிட்னியிலும், 2004ல் ஏதென்சிலும் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய அணியில் இவர் இடம் பெற்றிருந்தார். தற்போது, பஞ்சாப் போலீஸ் துறையில் கமாண்டன்டாக பணி புரிந்து வருகிறார்.