Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

என் படங்கள் வரும்போதெல்லாம் உதவியாளர் என்னை மிரட்டுகிறார்: நடிகை பார்வதி நாயர் குற்றச்சாட்டு

சென்னை: உயர்நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி எனது படங்கள் வெளிவரும்போதெல்லாம் என்னிடம் உதவியாளராக பணியாற்றிய சுபாஷ் என்னை மிரட்டி வருவதாக நடிகை பார்வதி நாயர் புகார் தெரிவித்துள்ளார். மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பார்வதி நாயர். இவர் தமிழில் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், எங்கிட்ட மோதாதே, நிமிர், என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய்யின் கோட் படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை பார்வதி நாயர் தனது வழக்கறிஞர் ஏ.சரவணன் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 2022ம் ஆண்டு என்னுடைய வீட்டில் இருந்த 18 லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருள்கள் திருட்டு போன வழக்கில் எனக்கு உதவியாளராக இருந்த சுபாஷ், உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது புகாரை திரும்ப பெறும்படி சுபாஷ் எனக்கு மிரட்டல் விடுத்ததோடு எனக்கெதிராக காவல் நிலையத்திலும் பொய்யான புகார் அளித்தார். தொடர்ந்து என்னுடைய தனிப்பட்ட வெளிவராத புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டும், பெயரை அவமதிக்கும் வகையில் பல பொய் செய்திகளை வெளியிட்டும் வருகிறார்.

இதுதொடர்பாக வழக்கில் கைது செய்யப்பட்டு, எழும்பூர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதே போல் சுபாஷ் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில், சுபாஷ் என்னை பற்றி பேச தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றமும் கடந்த 2023ம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனாலும் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் தொடர்ந்து சுபாஷ் என்னை பற்றி, அவதூறான, பெய்யான தகவல்களை சமூக ஊடகங்களுக்கு வழங்கி வருகிறார். தொடர்ந்து என்னுடைய திரைப்படங்கள் வெளிவரும் போதெல்லாம் இவ்வாறு சுபாஷ் தரப்பால் மிரட்டப்பட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். சுபாஷ் மீதான புகாரை திரும்ப பெற்று 2 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து சுபாஷ் தரப்பினரால் மிரட்டல் வந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் சுபாஷ் அளித்த புகாரில் என் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது. எனவே, சட்டத்தையும், சமூக ஊடகங்களையும் தவறாக பயன்படுத்தி என்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் என்னிடம் உதவியாளராக இருந்த சுபாஷ் செய்து வருகிறார். இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.