Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கலைஞர் கனவு நனவாகிறது தூத்துக்குடியில் 250 ஏக்கரில் விண்வெளி பூங்கா: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தூத்துக்குடி: தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மதுரை மாவட்டத்தில் டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் நியோ டைடல் பார்க் துவங்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில், டாடா எரிசக்தி மற்றும் விக்ரம் சோலார் எரிசக்தி ஆகிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விருதுநகரில் 1052 ஏக்கர் பரப்பளவில் பிஎம். மித்ரா பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. மொத்தத்தில், தென் தமிழ்நாடு இதுவரை பார்க்காத தொழில் வளர்ச்சியை சாத்தியமாக்கி வருகிறோம். தூத்துக்குடி பகுதியை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மையமாக உருவாக்கும் வகையில், பல்வேறு பசுமை ஹைட்ரஜன், சோலார் செல் உள்ளிட்ட உற்பத்தி திட்டங்களை, தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட பகுதிகளில் நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். இந்த சிறப்பான நிகழ்ச்சியில், தூத்துக்குடி மற்றும் நெல்லையின் வளர்ச்சிக்காக 4 சிறப்பு அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன்.

* தூத்துக்குடி மாவட்டத்தில் 250 ஏக்கர் பரப்பளவில், ஒரு விண்வெளி பூங்கா - ஸ்பேஸ் பார்க் அமைக்கப்படும். இந்த பூங்கா, விண்வெளி துறைக்கு தேவையான கருவிகளின் உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

* கப்பல் கட்டுமானத் துறையை மேம்படுத்த நாம் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இதற்காக ஒரு பிரத்யேக நிறுவனம் வெகு விரைவில் தொடங்கப்படும். அந்த நிறுவனம் மூலம், கப்பல் துறை தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்துக் கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்படும்.

* முருங்கை ஏற்றுமதி மற்றும் சாகுபடி கூட்டமைப்பிற்காக, தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் 5.59 கோடி ரூபாய் செலவினத்தில் ஒரு பொது வசதி மையம் நிறுவப்படும்.

* நெல்லை மாவட்டத்தில், தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் மண்டலப் பிரிவு அமைக்கப்படும். தமிழ்நாடு ரைசிங் மட்டுமல்ல, திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு வில் கீப் ஆன்ரைசிங். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.