Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தஞ்சையில் பள்ளிகள் திறக்கும் நாளிலேயே முதல்கட்டமாக 2 ஜோடி சீருடைகள் மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு

*1,07,510 சீருடைகள் அனுப்பி வைப்பு

தஞ்சாவூர் : மாணவர்களுக்கு சீருடைகள் அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பள்ளிகள் திறக்கும் நாளிலேயே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் இலவசமாக ஆண்டுதோறும் 4 ஜோடி சீருடைகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக்கூடங்கள் தொடங்கிய சில நாட்களிலேயே இந்த சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதாவது 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரைக்கால் டவுசர், மேல் சட்டையும், 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு பாவாடை, சட்டையும் வழங்கப்படுகின்றன. 6ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு முழுக்கால் சட்டையும் (பேண்ட்), மாணவிகளுக்கு சுடிதார், மேல் கோட்டும் வழங்கப்பட்டு வருகின்றன.1 முதல் 5ம் வகுப்புக்கு பச்சை நிறத்தில் கீழாடை, கட்டம் போட்ட வெளிர் பச்சை நிறத்தில் மேலாடை, 6 முதல் 8ம் வகுப் புக்கு சந்தன நிறத்தில் கீழாடை, கட்டம் போட்ட மேலாடை மற்றும் சந்தன நிறத்தில் மேல் கோட்டும் புதிய சீருடையாக வழங்கப் பட்டு வருகிறது.

பள்ளிகள் திறந்தவுடன் சீருடைகள் வழங்குவதற்கு ஏற்ப சீருடை தைப்பதற்கான துணிகள் மூட்டை, மூட்டையாக தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை அண்ணா நகர் அருகே உள்ள மாவட்ட துணி வெட்டும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த மையத்தில் மாணவ, மாணவிகளின் அளவுகளுக்கு ஏற்ப துணிகள் எந்திரம் மூலமாக வெட்டும் பணி நடைபெற்று வருகிறது. எந்திரம் மூலம் வெட்டப்படும் துணிகள் உடனுக்குடன் தஞ்சை குந்தவைநாச்சியார் மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்கம், தஞ்சை மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்கம், கும்பகோணம் மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அந்தந்த கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள மகளிர், சீருடைகளை தைத்து, கூட்டுறவு சங்கங்களுக்கே வந்து கொடுக்கின்றனர். அங்கே சீருடைகள் சரியான அளவில் தைக்கப்பட்டு இருக்கிறதா? என அதிகாரிகள் ஆய்வு செய்து, எம்பிராய்டரி, பித்தான் வைக்கப்பட்டு அந்த சீருடைகள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

4 ஜோடி சீருடைகள் வழங்க வேண்டிய நிலையில் முதல்கட்டமாக 2 ஜோடி சீருடைகள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் திறக்கும் நாளிலேயே மாணவர்களுக்கு சீருடைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 ஜோடி சீருடைகள் விரைவில் அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீருடைகள் குறித்து தொழில் கூட்டுறவு அலுவலர் கவுதமன், கணக்காளர் பாஸ்கரன் ஆகியோர் கூறும்போது,தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 510 மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை அனுப்பப்படுகிறது. அரசால் கொள்முதல் செய்யப்படும் சீருடை துணிகள் சமூக நலத்துறை மூலம் பெறப்பட்டு சீருடை தைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

பின்னர் பள்ளி கல்வித்துறை மூலம் அரசு பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும். தஞ்சை மாவட்டத்தில் 3 கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த 1,851 உறுப்பினர்கள் சீருடைகளை தைக்கின்றனர். இதுவரை பள்ளிகளுக்கு 2 லட்சத்து 36 ஆயிரத்து 983 சீருடைகள் அனுப்பி வைக்கப்பட் டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.