Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திடீர் திருப்பம் பாஜ வக்கீல் அணி செயலாளர் பால்கனகராஜிடம் விசாரணை: அடுத்தடுத்த விசாரணையால் பரபரப்பு

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக பாஜ வக்கீல் அணி செயலாளர் பால்கனகராஜிடம் 8 மணி நேரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இது போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5ம் தேதி பெரம்பூரில் வெட்டிக் கொல்லப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலையாளிகளின் செல்போன் அழைப்புகளை வைத்து இதுவரை 200 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பாஜ மாநில துணைத் தலைவரும் வழக்கறிஞருமான பால் கனகராஜிடம் ரவுடிகள் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பினர். அதன் அடிப்படையில் சென்னை எழும்பூரில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் பால் கனகராஜ் ரவுடிகள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன்பு நேற்று காலை 10.30 மணி அளவில் ஆஜரான நிலையில் அவரிடம் மாலை 6.30 மணி வரை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக பால் கனகராஜ்யிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் சம்பவ செந்தில் வழக்கில் ஆஜரானது, நாகேந்திரனுடன் உள்ள பழக்கம், சந்திப்புகள் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலையில் குற்றவாளிகளுக்கு உள்ள தொடர்பு குறித்து தெரியுமா என்பது உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து அவரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்குப் பின்னர், பால்கனகராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: என்னுடைய செல்போன் விவரங்களின் அடிப்படையில் காவல்துறை நேரில் அழைத்து விசாரணை நடத்தினர்.

பார்கவுன்சில் தலைவர் பதவிக்கு தேர்தல் முன்விரோதம் இருக்குமோ என்ற கோணத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ள ஆனந்தன் சந்தேகத்தை எழுப்பி இருந்தார். ஆனால் அந்த தேர்தலுக்கும் இந்த கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை தெரிவித்துள்ளேன். தனிப்பட்ட முறை யில் எந்த பிரச்னையும் எங்களுக்குள் கிடையாது. கடந்த 2017ம் ஆண்டுக்கு பிறகு நாங்கள் நண்பர்களாக பழகி வந்துள்ளோம். அவ்வப்போது ஒன்றாக விழாக்களில் கலந்துகொண்டு உள்ளோம்.

எனக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் முன்விரோதம் எதுவும் கிடையாது. கடந்த 2015ம் ஆண்டு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன் பிறகு பேசி நாங்கள் சமாதானம் ஆகிவிட்டோம். நட்பாகவே பழகினோம். அதேபோல சிபிஐ விசாரணை வேண்டும் என சொல்லி குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர். ஆனால் போலீசார் விசாரணை எந்த கோணத்தில் செல்கிறது என எனக்கு தெரியவில்லை. ரவுடி நாகேந்திரன் வழக்கு தொடர்பாக நான் நேரில் ஆஜரானது கிடையாது.

நாகேந்திரன் புதுமனை புகுவிழாவில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக நான் காவல்துறையிடம் பேசி இருந்தேன். காவல்துறை எனது செல்போனை பறிமுதல் செய்யவில்லை. என்னிடம் தான் செல்போன் உள்ளது. ஏற்கனவே கடந்த 4ம் தேதி என்னிடம் வாய்மொழியாக விசாரணை மேற்கொண்டனர். அதை தொடர்ந்து நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளேன். முழுமையாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் என்னை விசாரணைக்கு அழைக்க மாட்டார்கள். இவ்வாறு தெரிவித்தார்.