Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து வழக்கு தொடர வலியுறுத்துவோம்: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் தகவல்

சென்னை: ஒன்றிய அரசின் மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும்படி இந்திய பார் கவுன்சிலை வலியுறுத்த உள்ளதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் அளித்த பேட்டி: ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று குற்றவியல் சட்டங்களால் அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவற்றை திரும்பப் பெறுமாறு ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

வரைவுச் சட்டம் தயாரிக்கப்பட்ட 2020ம் ஆண்டே உச்ச நீதிமன்ற நீதிபதி, சட்ட வல்லுனர்கள் குழுவை நியமித்து ஆய்வு செய்யுமாறு ஒன்றிய உள்துறை மற்றும் சட்டத்துறையிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால் எந்த விவாதங்களும் நடத்தாமல், பார் கவுன்சிலின் ஆலோசனைகளை கருத்தில் கொள்ளாமல் இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அனைத்து மாநில பார் கவுன்சில் பிரதிநிதிகள், வழக்கறிஞர்கள் சங்க பிரதிநிதிகள் அடங்கிய கூட்டுக் குழுவை அமைத்து, சட்டத்தை திரும்பப் பெறுமாறு பிரதமர், உள்துறை மற்றும் சட்டத் துறை அமைச்சர்களை வலியுறுத்துமாறு அகில இந்திய பார் கவுன்சிலை கேட்டுக்கொள்ள முடிவு செய்துள்ளோம்.

அதன் பிறகும் இந்த சட்டங்களை திரும்பப் பெறாவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும்படி அகில இந்திய பார் கவுன்சிலை வலியுறுத்த உள்ளோம். இந்த சட்டங்களை அமல்படுத்தியதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து சட்டங்கள் திரும்ப பெற ஒன்றிய அரசை வலியுறுத்தியதை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வரவேற்கிறது. இந்த சட்டங்களை ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் குழுவை நியமித்த தமிழக அரசின் முடிவுக்கும், சட்டங்களை எதிர்த்து திமுக சார்பில் வழக்கு தாக்கல் தொடரப்பட்டதையும் வரவேற்கிறோம்.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர்கள் குறித்து காவல் துறை அறிக்கை கிடைத்ததும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 120 வழக்கறிஞர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இனிமேல் சஸ்பெண்ட் நடவடிக்கை மட்டுமல்லாமல், குற்ற வழக்குகளில் தொடர்புடைய வழக்கறிஞர்களை நிரந்தரமாக தொழில் செய்வதிலிருந்து நீக்குவது குறித்து கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். குற்ற பின்னணி இல்லாதவர்கள் மட்டுமே பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களாக பதிவு செய்யப்படுகிறார்கள். வழக்கறிஞர்கள் கொலை செய்யப்படுவதை தடுக்கும் வகையில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர வலியுறுத்த உள்ளோம் என்று கூறினார்.