Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் சம்பவ செந்தில் உயிருக்கு ஆபத்து?

* தங்களை காப்பாற்றிக்கொள்ள பலிகடாவாக்க திட்டமா என வெளியான தகவலால் பரபரப்பு

* தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை தீவிரம்

சென்னை; ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் பிரபல ரவுடி சம்பவ செந்தில் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தங்களை காப்பாற்றிக் கொள்ள பலிகடாவாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானதால், தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னையில் உள்ள தனது வீட்டின் அருகே படுகொலை செய்யப்பட்டார். கொலை நடந்த அன்றே குற்றவாளிகள் போலீசில் சரண் அடைந்தனர்.

அதில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, அவரது நண்பரும் வக்கீலுமான அருள் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்களுடன் வழக்கு முடிந்து விடும் என்று குற்றவாளிகள் கருதினர். ஆனால் திடீர் திருப்பமாக போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு, புதிய கமிஷனராக அருண் நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரிக்க இணை கமிஷனர் விஜயகுமார் தலைமையில் சிறப்பு புலனாய்வு படை அமைக்கப்பட்டது.

இந்தப் புலனாய்வுப் படையினர் நடத்திய விசாரணையில், ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப்பழியாக மட்டும் இந்தக் கொலை நடக்கவில்லை. இதற்கு பின்னர் பெரிய கும்பல் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், வடசென்னையை கலக்கி வந்த பிரபல ரவுடி நாகேந்திரன் மற்றும் அவரது மகன் அஸ்வத்தாமன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். முன்னதாக இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் காதலி அஞ்சலை மற்றும் அருளின் நண்பரான வக்கீல் மலர்கொடி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதனால் ஆற்காடு சுரேஷ் மட்டுமல்லாது நாகேந்திரனும் சம்பந்தப்பட்டிருந்ததால் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் நில விவகாரம் தொடர்பாக நாகேந்திரனுக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் மோதல் ஏற்பட்டுள்ளது தெரிந்தது. இதைத் தொடர்ந்து ஆற்காடு கொலைக்குப் பழிக்குப்பழியாக பொன்னைபாலு தலைமையிலான கும்பலை ஒரு கும்பல் சந்தித்து, ஆம்ஸ்ட்ராங் கொலை திட்டத்தை வகுத்துக் கொடுத்துள்ளனர் என்று நாகேந்திரனுக்கு தெரிந்தது. இதனால் அவனும் தன் பங்கிற்கு மகன் மூலம் பண உதவியும், ஆட்கள் உதவியும் செய்துள்ளது தெரிந்தது.

இதனால், இந்தக் கொலையில் பொன்னைபாலு, நாகேந்திரன் ஆகிய கும்பல்கள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதேநேரத்தில், இந்தக் கொலைக்கு மூல காரணமாக செயல்பட்டது சம்பவ செந்தில் என்று தெரியவந்தது. சம்பவ செந்தில்தான், ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னைபாலுவை சந்தித்து, ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக் கட்ட தூண்டி விட்டுள்ளார். நீ கொலை செய்ய முன் வந்தால், நாங்கள் ஆம்ஸ்ட்ராங்கை அடித்துக் கொடுக்கிறோம். நீயும் சம்பவ இடத்துக்கு வா. கொலை வழக்கில் சரண் அடைந்து விடு.

உன்னை ஜாமீனில் வெளியில் நாங்கள் எடுக்கிறோம். இதற்காக பெரிய அளவில் பணம்கொடுக்கிறோம் என்று உறுதியளித்துள்ளார். இதை நம்பித்தான் பொன்னைபாலு கொலைக்கு சம்மதித்துள்ளார். ஆனால் சம்பவ செந்திலின் திட்டம் என்னவென்றால், இந்தக் கொலை முழுக்க முழுக்க ஆற்காடு சுரேஷின் கொலைக்குப் பழிக்குப்பழியாக நடந்திருக்கிறது என்பதை உறுதிப்படுத்துவதற்கான தடயங்களை தயார் செய்து விட்டு, கொலையை முன்னின்று செய்திருப்பது தெரிந்தது.

இதனால் வழக்கில் தாங்கள் மாட்ட மாட்டோம் என்றும் சம்பவ செந்தில் கருதியுள்ளார். ஆனால் போலீசார், இந்தக் கொலையில் சம்பவ செந்திலுக்கு தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்தியதும் அவர் தலைமறைவாகிவிட்டார். ஆனால் சம்பவ செந்திலுக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் எந்த முன்விரோதமும் இல்லை. சம்பவ செந்தில் கூலிப்படையாக செயல்பட்டு கொலையை செய்து கொடுத்துள்ளார். இதனால் சம்பவ செந்திலுக்கு கொலைக்கான ஆர்டர் கொடுத்தது யார் என்பதுதான் தற்போது பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

ஆனால் அந்தக் கேள்விக்குறிக்கான விடையை போலீசார் கண்டுபிடித்து விட்டனர். ஆனால், கொலை திட்டத்தை அரங்கேற்றிய சம்பவ செந்தில் கிடைத்தால் மட்டுமே, கொலைக்கு முக்கிய காரணமான விஐபி சிக்குவார் என்று கூறப்படுகிறது. சம்பவ செந்தில் தலைமறைவாக இருக்கும்வரை விஐபி மாட்ட மாட்டார். ஆனால், சென்னை போலீசார் தற்போது திறமையாக செயல்பட்டு வருகின்றனர். விரைவில் சம்பவ செந்திலை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதனால், சம்பவ செந்தில் போலீஸ் பிடியில் மாட்டிவிட்டால் கொலைக்கான ஆர்டர் கொடுத்த விஐபியும் சிக்கிவிடுவார் என்று கூறப்படுகிறது. இதனால் தலைமறைவாக இருக்கும் சம்பவ செந்திலை தீர்த்துக்கட்டும் வேலையில் விஐபி ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசுக்கு எழுந்துள்ளது. சம்பவ செந்திலுக்கு ஆபத்து ஏற்பட்டால், தான் தப்பிவிடலாம் என்று கருதுவதால், இந்த திட்டத்தை அவர் தீட்டியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும், அந்த விஐபிக்கு சர்வதேச அளவில் ஆட்கள் இருப்பவதாகவும் போலீஸ் சந்தேகப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் விஐபியால் சம்பவ செந்திலுக்கு ஆபத்து ஏற்படுவதற்கு முன்னர் அவரை கைது செய்து விட்டால் வழக்கை முழுமையாக முடிவுக்கு கொண்டு வரலாம் என்று தனிப்படை போலீசார் கருதுகின்றனர். இதனால், சம்பவ செந்திலை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.