சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வெடிகுண்டுகளை கைமாற்றியதாக தேடப்பட்டு வந்த 3 பேர் கைது செய்யப்பட்டதையடுத்து, கைது எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பொன்னை பாலுவில் தொடங்கி பிரபல ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி என இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய ரவுடிகள் கொண்டு வந்த சில நாட்டு வெடிகுண்டுகளும், கைதானவர்கள் கொடுத்த தகவலின்பேரில் கோடம்பாக்கத்தில் பதுக்கி இருந்த 3 நாட்டு வெடிகுண்டுகளும் கைப்பற்றப்பட்டன.
நாட்டு வெடிகுண்டுகளை மொட்டை கிருஷ்ணா மற்றும் சம்பவ செந்திலுடன் தொடர்பில் இருந்த ராஜேஷ் என்பவர் தயார் செய்து, அதனை கோபி, குமரன் ஆகியோரிடம் கொடுத்து அனுப்பியது தெரியவந்தது. இவர்களிடமிருந்து ஹரிகரன் நாட்டு வெடிகுண்டுகளை வாங்கி அதை அருளிடம் கொடுத்ததாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் ஏற்கனவே ஹரிகரன், சிவா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து போலீசார் ராஜேஷ், குமரன், கோபி மற்றும் புதூர் அப்பு ஆகிய 4 பேரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனிப்படை போலீசார் ராஜேஷ், கோபி, குமரன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
மொட்டை கிருஷ்ணா மற்றும் சம்பவ செந்தில் குறித்து ராஜேஷிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராஜேஷ் மீது ஏற்கனவே 2 கொலை வழக்குகள் உள்ளன. நேற்று முன்தினம் போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட மணிவண்ணனிடமும் போலீசார் விசாரிக்கின்றனர். இவர் உணவு டெலிவரி ஊழியர் போல வந்து ஆம்ஸ்ட்ராங் காலில் வெட்டியவர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள ரவுடி சம்பவ செந்திலுக்கு எதிராக லுக் அவுட் நோட்டிஸ் மற்றும் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டு போலீசார் தீவிரமாக அவரை தேடி வருகின்றனர். இதேபோல் வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு அவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.