Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

‘ஆம்ஸ்ட்ராங்கிற்கு நேர்ந்த கதிதான் உனக்கும் ஏற்படும்’ திமுக சிறுபான்மையின நிர்வாகிக்கு ஆடியோ மூலம் ரவுடி மிரட்டல்: பெட்ரோல் குண்டு வீசுவோம் எனவும் எச்சரிக்கை

சென்னை: மயிலாடுதுறை திமுக மாவட்ட சிறுபான்மையின துணை அமைப்பாளரான அகமது ஷா வலியுல்லாவுக்கு, வாட்ஸ் அப் ஆடியோ மூலம், ‘ஆம்ஸ்ட்ராங்கிற்கு நேர்ந்த கதிதான் உனக்கும் ஏற்படும் என்றும், உனது கட்சி அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசுவோம் என மிரட்டல் விடுத்த ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர். மயிலாடுதுறை சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் அகமது ஷா வலியுல்லா (40). தொழிலதிபரான இவர், வெளிநாடுகளுக்கு மொத்த ஆடைகள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்து வருகிறார். அதோடு, தேயிலை மற்றும் ஏலக்காய் ஏற்றுமதியும் செய்து வருகிறார்.

இவரது தந்தை பஷீர் அகமது திமுகவில் முக்கிய பதவிகளில் இருந்துள்ளார். இதனால் தனது தந்தை வழியில் கடந்த 20 ஆண்டுகளாக திமுகவில் உறுப்பினராக இருந்து தற்போது மயிலாடுதுறை மாவட்ட திமுக சிறுபான்மையின மாவட்ட துணை அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அகமது ஷா வலியுல்லா வாட்ஸ் அப் எண்ணிற்கு கடந்த 14ம் தேதி இரவு 10 மணிக்கு முன்பின் அறிமுகம் இல்லாத எண்ணில் இருந்து ஆடியோ ஒன்று வந்தது. அதில் ஆபாச வார்த்தைகளில் திட்டி, உனது அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசுவோம். ஆம்ஸ்ட்ராங் கொலை போல் உனக்கும் நடக்கும் என்று மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அகமது ஷா வலியுல்லா உடனே தனக்கு மிரட்டல் வந்த வாட்ஸ்அப் ஆடியோவுடன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், எனது அரசியல் பணிகளை பிடிக்காமல் அதை தடுக்கும் விதமாக எனது அலுவலகத்திற்கு பெட்ரோல் குண்டு வீசுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்த அந்த நபரை கண்டுபிடித்து அவருக்கு சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எனது அலுவலகத்திற்கும், எனக்கும் உரிய பாதுகாப்பு தரும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி மயிலாடுதுறை போலீசார் பிஎன்எஸ் 296(பி), 351(3), 67 ஐடி ஆக்ட் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தொழிலதிபர் அகமது ஷா வலியுல்லாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த செல்போன் எண்ணை வைத்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.