உடுப்பி: கர்நாடகா கடற்கரையில் 4வது சர்வதேச கடல்சார் அபாயகரமான பொருட்களை ஏற்றிச் சென்ற கொள்கலன் கப்பல் தீப்பற்றி எரிந்தது. இதனால், கடலோர மாவட்டங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து இலங்கையின் கொழும்பு நோக்கி சரக்கு கப்பல் புறப்பட்டது. அரபிக்கடலில் அந்த கப்பல், மங்களூரு அருகே சூரத்கல் கடற்கரையில் இருந்து 33 கடல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென தீப்பற்றி எரிந்தது.
உடனே, கப்பலுக்கு நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்து, இந்திய கடலோர காவல்படையினர், சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்து, கண்காணித்து வருகின்றனர். கப்பல் எரியக்கூடிய திடப்பொருட்களையும் சில திரவங்களையும் கொண்டு செல்கிறது. மீண்டும் தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தால் அந்த பொருட்களால் கடலுக்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சப்படுகிறது.
உடுப்பி மாவட்ட கலெக்டர் டாக்டர் வித்யாகுமாரி, நடுக்கடலில் உள்ள கப்பலுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
கடலோர காவல்படை, சிஆர்இசட் அதிகாரிகள், சுற்றுச்சூழல் துறை மற்றும் துறைமுக அதிகாரசபை தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார். இந்திய கடலோர காவல்படை தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருவதாகவும், கொள்கலன் கப்பல் பாதுகாப்பாக செல்வதை உறுதிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.