கள்ளக்குறிச்சி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை நியமனம் செய்ய 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
*ஆட்சியர் பிரசாந்த் அறிவுறுத்தல்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர் தேர்ந்தெடுத்தல் குறித்து மாற்றுத்திறனாளிகள் நல சங்கங்களுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் பங்கேற்பு மற்றும் குரல்கள் ஒலிப்பதற்காக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுடைய பங்கினை அளிப்பதற்காகவும், சமூக நீதியினை அனைத்து மக்களுடன் கூடிய பங்களிப்பினை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை நியமனம் செய்வதற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை நியமனம் செய்யும் வகையில் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பங்களை 31.07.2025க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் நியமன பதவிகளுக்கு பெண் மாற்றுத்திறனாளிகளும் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) வெங்கட்ரமணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அந்தோணிராஜ், தொடர்புடைய அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளி நல சங்கத்தினர், தொண்டு நிறுவனத்தினர் பலர் கலந்து கொண்டனர்.