Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அபார்ட்மெண்ட் கட்டி தருவதாக கூறி போலி ஆவணம் மூலம் வங்கியில் கடன் பெற்று ரூ1.50 கோடி மோசடி: ஒருவர் கைது; மேலும் 2 பேருக்கு வலை

பூந்தமல்லி: அப்பார்மெண்ட் கட்டித் தருவதாக கூறி போலி ஆவணம் மூலம் வங்கியில் கடன் பெற்று ₹1.50 கோடி மோசடி செய்த வழக்கில் ஒருவரை கைது செய்த போலீசார், மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர். ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அம்பத்தூர், ஒரகடம் நெடுஞ்சாலையைச் சேர்ந்தவர் மதியழகன் என்பவரின் மனைவி விஜயகுமாரி (58). இவர் கடந்த மார்ச் 25ம் தேதி மத்திய குற்றப்பிரிவில் ஒரு புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அம்பத்தூர், ஒரகடம் பகுதியில் 6650 சதுரடியில் சுமார் முக்கால் கிரவுண்ட் வீடும், காலி மனையும் எனக்கு உள்ளது. கடந்த 2012ம் ஆண்டு ராதாகிருஷ்ணன், துளசிராமன், ராஜன் ஆகிய மூவரும் என்னுடைய வீட்டிற்கு வந்தனர். அவர்கள் கட்டுமான தொழில் செய்து வருவதாகவும், நான் குடியிருக்கும் பழைய வீட்டினை இடித்துவிட்டு அபார்ட்மெண்ட் கட்டி அதில் 5 வீடுகளும், ₹30 லட்சமும் கொடுப்பதாக கூறினார்கள்.

அதை நம்பி என் வீட்டின் அசல் ஆவணத்தை ராதாகிருஷ்ணன் என்பவரிடம் கொடுத்தேன். அப்போது, துளசிராமன் மற்றும் ராஜன் உடன் இருந்தனர். 6 மாதங்கள் கழித்து வங்கியில் வீட்டின் மீது கடன் பெற்று வீட்டு வேலை ஆரம்பிக்க வேண்டும், அதற்கு என்னிடம் கையொப்பம் தேவைப்படுவதாக கூறி துளசிராமன் என்னை காரில் கிண்டியில் உள்ள வங்கிக்கு அழைத்துச் சென்று கையொப்பம் பெற்று, மீண்டும் வீட்டில் கொண்டு வந்து விட்டுச் சென்றார். நீண்ட நாட்கள் ஆனதையடுத்து, வீடு கட்ட எந்த ஒரு ஏற்பாடும் செய்யாததால் சந்தேகம் அடைந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள அவர்களது அலுவலகம் சென்று விசாரித்தேன். அப்போதுதான் அவர்கள் அந்த விலாசத்தில் இல்லை என்பது எனக்கு தெரியவந்தது. இதில், 8 வருடங்களாக தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், எனது கணவர் 2017ம் ஆண்டு உடல்நல பாதிப்பில் இறந்துவிட்டார்.

இதனை தொடர்ந்து, 2021ம் ஆண்டு பேங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்து எங்கள் வீட்டிற்கு வந்தவர்கள், உங்கள் வீட்டை அரிச்சந்திரன் ₹92 லட்சத்துக்கு அடமானம் வைத்து பணம் வாங்கினார், அதற்கு வட்டியுடன் சேர்ந்து ₹1.50 கோடி கட்ட வேண்டும் என்று கூறிவிட்டுச் சென்றனர். எனவே, ஆவடி காவல் ஆணையர் இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இதனை தொடர்ந்து, ஆணையரின் பரிந்துரைப்படி துணை ஆணையர் பெருமாள் உத்தரவின்பேரில், உதவி ஆணையர் பொன் சங்கர் தலைமையில் ஆய்வாளர் வள்ளி விசாரணை மேற்கொண்டார். இதில், தலைமறைவாக இருந்த கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த துளசிராமன் (44) என்பவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ராதாகிருஷ்ணன் மற்றும் ராஜன் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.