Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பழைய கட்டிடத்தை காட்டி புதிய கட்டிடம் கட்டியதாக ரூ.35.68 லட்சம் மோசடி தி.நகர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு

* உடந்தையாக இருந்த சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர்களும் சிக்கினர்

சென்னை: பழைய கட்டிடத்தை கணக்கு காட்டி புதிய கட்டிடம் கட்டியதாக ரூ.35.68 லட்சம் மோசடி செய்த குற்றச்சாட்டில் சென்னை தி.நகர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா மற்றும் மாநகராட்சி உதவி பொறியாளர்கள் உள்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2016-21ம் ஆண்டு வரை சென்னை தி.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் சத்யா. இவர், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டிடம் கட்டுவதாக கூறி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இதனை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சர்மு தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், 2018-19ம் நிதியாண்டில் மேற்கு மாம்பலம் காசிகுளம் பகுதியில் பல்நோக்கு பயன்பாட்டிற்காக ரூ.17 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்து, ரூ.14.23 லட்சம் நிதியை கணக்கீடு செய்து, புதிய கட்டிடம் கட்டியதாக மாம்பலம் பகுதியில் ஏற்கனவே 3.5.2017ல் கட்டப்பட்ட நியாயவிலை கடையை கணக்கு காட்டி, ரூ.13.30 லட்சம் நிதியை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கீடு பெற்று மோசடி செய்தது தெரியவந்தது.

அதேபோல், கோடம்பாக்கம் மண்டலம் பிருந்தாவனம் தெருவில் பல்நோக்கு கட்டிடம் கட்ட தோராயமாக ரூ.9.80 லட்சம் மதிப்பீடு செய்து, புதிய கட்டிடம் கட்டியதாக பழைய கட்டிடத்தை கணக்கு காட்டி, ரூ.8.45 லட்சம் அனுமதி அளிக்க வேண்டும் என்று ஆவணங்கள் சமர்ப்பித்து தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7.81 லட்சம் பணம் வரவு பெற்று மோசடி செய்ததும் தெரியவந்தது. மேலும் கோடம்பாக்கம் பிருந்தாவனம் தெருவில் மற்றொரு கட்டிடம் ரூ.8.84 லட்சம் என மதிப்பீடு செய்து, வழக்கம் போல் பழைய கட்டிடத்தை கணக்கு காட்டி தனது எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.8.61 லட்சம் நிதி பெற்று மோசடி செய்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

2018-19ம் நிதி ஆண்டில் கோடம்பாக்கம் ஈஸ்வரன் கோயில் தெருவில் பொது பயன்பாட்டிற்கு ரூ.7 லட்சத்தில் கட்டிடம் கட்ட முடிவு செய்து, அதற்காக ரூ.6.11 லட்சத்திற்கு கட்டிடம் கட்டியதாக பழைய மாநகராட்சி கட்டிடத்தை கணக்கு காட்டி தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5.94 லட்சம் நிதி பெற்று மோசடி செய்ததாகவும் விசாரணையில் அடுத்தடுத்து தெரியவந்துள்ளது.

இதேபோல் கட்டாத கட்டிடத்தை கட்டியதாக 4 பழைய கட்டிடங்களை புதிய கட்டிடம் போல் கணக்கு காட்டி தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 35 லட்சத்து 68 ஆயிரத்து 426 ரூபாய் நிதி பெற்று தமிழ்நாடு அரசுக்கு எம்எல்ஏ சத்யா இழப்பை ஏற்படுத்தி, மோசடி செய்தது விசாரணை மூலம் உறுதியானது.

இந்த மோசடிக்கு சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் 10வது மண்டல உதவி பொறியாளர்கள் இளங்கோவன், மணிராஜா, ராதாகிருஷ்ணன், மாநகராட்சி நிர்வாகப் பொறியாளர் பெரியசாமி, கோடம்பாக்கம் 10ம் மண்டல முன்னாள் மண்டல அதிகாரி நடராஜன், கோயம்பேடு சிவிடி எண்டர்பிரைசர்ஸ் கட்டுமான நிறுவனத்தின் அதிகாரி பாஸ்கரன் ஆகியோர் உறுதுணையாக இருந்ததும் விசாரணையின் மூலம் உறுதியானது.

இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சர்மு தலைமையிலான குழுவினர் முன்னாள் எம்எல்ஏ தி.நகர் சத்யா மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த இந்த 6 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து தனது முதற்கட்ட விசாரணையை தொடங்கினர். அதிமுக ஆட்சி காலத்தில் எம்எல்ஏ ஒருவர் தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியை தவறாகப் பயன்படுத்தி ரூ.35.68 லட்சம் மோசடி செய்த விவகாரம் தமிழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.