Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அண்ணா பல்கலையில் படிக்க விருப்பமா? குறைந்த கட்-ஆப் மதிப்பெண்களில் சேரக்கூடிய படிப்புகள் என்னென்ன?

சென்னை: தமிழ்நாட்டில் மாநில பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிப்புகளில் இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனமாக திகழ்கிறது. இங்கு பல்வேறு பொறியியல் பாடங்களுக்கு பட்டப்படிப்புகள் வழங்கப்படுகிறது. தற்போது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. விண்ணப்பிக்க ஜூன் 6ம் தேதி கடைசி நாள். கட்-ஆப் குறைவாக இருந்தால் தாங்கள் விரும்பிய பாடத்தை தேர்வு செய்ய முடியாது என மாணவர்கள் பலரும் வருத்தப்படுவார்கள்.

ஆனால் அண்ணா பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பி.இ., பி.டெக் ஆகிய பொறியியல் படிப்புகளில் குறைந்த கட்-ஆப் உடைய படிப்புகள் நிறைய உள்ளன. இந்திய அளவில் தலைசிறந்த மாநில பல்கலைக்கழகங்களில் அண்ணா பல்கலை முதலிடத்தில் உள்ளது.  க்யூஎஸ் உலக பல்கலைக்கழக தரவரிசையில் சர்வதேச அளவில் 383வது இடத்தையும். இந்தியாவில் 10வது இடத்தை பெற்றுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் கிண்டியில் பொறியியல் கல்லூரி (சிஇஜி), குரோம்பேட்டையில் மெட்ராஸ் தொழில்நுட்ப நிறுவனம் (எம்ஐடி), அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி (ஏசிடி), கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளி (எஸ்ஏபி) என 4 வளாகங்கள் இயங்குகிறது.

இதில் முதல் மூன்று வளாகங்களில் பொறியியல் படிப்புகள் வழங்கப்படுகிறது. கிண்டி கல்லூரியில் பயோ மெடிக்கல், சிவில், கணினி அறிவியல் மற்றும் பொறியியல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் பொறியியல், ஜியோ இன்பார்மெட்ரிக்ஸ், தொழிற்சாலை தொழில்நுட்பம், மெட்டீரியல் சயின்ஸ், மெக்கானிக்கல், மைனிங், உற்பத்தி, பிரிண்டிங் ஆகிய படிப்புகள் வழங்கப்படுகிறது. சிவில் மற்றும் மெக்கானிக்கல் பொறியியல் தமிழ் வழி கல்வியிலும் வழங்கப்படுகிறது.

ஏரோனாட்டிகல் இன்ஜினியரிங், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் டேட்டா சயின்ஸ், ஆட்டோமொபைல், கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கன்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமெண்டேஷன், தகவல் தொடர்பியல் (ஐடி), உற்பத்தி, ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் தொழில்நுட்பம் ஆகிய பொறியியல் படிப்புகள் வழங்கபடுகிறது.

அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியை பொறுத்தவரை ஆடை தொழில்நுட்பம், கெமிக்கல், பீங்கான் தொழில்நுட்பம், உணவு தொழில்நுட்பம், தொழில்துறை உயிரி தொழில்நுட்பம், தோல் தொழில்நுட்பம், மருந்து தொழில்நுட்பம், பெட்ரோலிய பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், டெக்ஸ்டயில் தொழில்நுட்பம் ஆகிய பொறியியல் படிப்புகள் வழங்கப்படுகிறது.

சென்னை மட்டுமல்லாமல், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் அண்ணா பல்கலைக்கழகம் 3 மண்டல கல்லூரிகள் இயங்குகிறது. இவை இல்லாமல் 13 பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள் இயங்குகிறது. இக் கல்லூரிகளிலும் பல்வேறு பொறியியல் பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்புகள் வழங்கப்படுகிறது.

* கட்-ஆப் மதிப்பெண்கள் எப்படி கணக்கிட வேண்டும்:

பொறியியல் கலந்தாய்வில் கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில்தான் தரவரிசை வெளியிடப்படும். அதை தொடர்ந்து, கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு விருப்பமான இடங்கள் தேர்வு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். கட்-ஆப் மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் விரும்பும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். பொறியியல் படிப்பிற்கு 12ம் வகுப்பு தேர்வின் மாணவர்கள் இயற்பியல், கணிதம், வேதியியல் மதிப்பெண்கள் அடிப்படையில் கட்-ஆப் கணக்கிடப்படும்.

கணிதத்தில் 100க்கு எடுத்த மதிப்பெண்கள் அப்படியே எடுத்துகொள்ளப்படும். இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் 100க்கு கொண்டுவரப்படும். தொடர்ந்து, கணிதம், மற்றும் இரண்டு பாடங்கள் 100க்கு பெற்ற மதிப்பெண்கள் சேர்ந்தால் வருவதே கட்-ஆப் மதிப்பெண்கள். உதாரணத்திற்கு, கணிதம் - 98, இயற்பியல் 89, வேதியியல் 88 என்றால், இயற்பியல் + வேதியியல் மதிப்பெண்கள் சேர்ந்து 100க்கு எடுத்துகொண்டால் 88.5 ஆகும்.

இதனுடன் கணித மதிப்பெண்கள் சேர்ந்தால் மொத்தம் 186.5 இதுவே கட்-ஆப் மதிப்பெண்கள். இந்த முறைகளின்படியே கட்-ஆப் தேர்வு செய்யப்படுகிறது. கோர் படிப்புகளை தவிர்த்து இதர படிப்புகளுக்கு குறைவான கட்-ஆப் போதுமானதாக கருதப்படுகிறது. எனவே மாணவர்கள் பிற துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகளையும் தெரிந்துகொண்டு எதிர்காலத்தில் நல்ல ஊதியங்களை பெற சரியான படிப்பை தேர்வு செய்யுமாறு கல்வியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.