Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஓபிஎஸ் குறித்து அண்ணாமலை பேச்சு அரைவேக்காட்டுதனம் அதிமுகவில் குட்டையை குழப்பும் பாஜவின் எண்ணம் பலிக்காது: உதயகுமார் கடும் தாக்கு

மதுரை: எந்த காலத்திலும் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இணைக்க மாட்டோம் என்று கூறியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார், பாஜ மாநிலத்தலைவர் அண்ணாமலையை அரைவேக்காடு என்றும் காட்டமாக கூறியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் மதுரையில் நேற்று அளித்த பேட்டி: நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் சேர்க்க திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கு திரைமறைவில் ரகசிய முயற்சி நடப்பதாகவும் செய்திகள் வருகிறது.

ஜெயலலிதாவிற்கு பிறகு தனது பதவி பறிபோகக்கூடாது என்பதற்காக கட்சியின் பிளவிற்கு ஓ.பன்னீர்செல்வம் பிள்ளையார் சுழி போட்டார். கட்சிக்கு எதிராக பல்வேறு துரோகங்கள் செய்தாலும், ஒற்றுமையின் முக்கியத்துவம் கருதி முக்கிய பொறுப்புகள் வழங்கி ஆட்சியில் துணை முதலமைச்சர் பதவியை அவருக்கு எடப்பாடி பழனிசாமி வழங்கினார். ஆனால், தேனி மாவட்டத்தின் 4 தொகுதிகளில், தான் மட்டும் வெற்றிபெற்று மற்ற 3 தொகுதிகளில் கட்சியை தோல்வியடையச் செய்தார்.

பொதுக்குழு கூடியபோது தலைமைக் கழகத்தை அடித்து நொறுக்கி, கண்களில் ரத்தம் வரும் வகையில் காலால் எட்டி உதைத்தார். மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர் ஒற்றை சீட்டுக்காக இரட்டை இலையை தோற்கடிக்க ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறார். இது எந்த விதத்தில் நியாயம்? எதற்காக இந்த பாவச் செயலை செய்கிறார்? தனக்கு பதவி அதிகாரம், இல்லை என்றால் கட்சியை சின்னாபின்னப்படுத்த எந்த நிலைக்கும் போவார்.

மீண்டும் ஓபிஎஸ்சை சேர்க்கும் விஷப்பரீட்சையை அதிமுகவின் எந்த தொண்டரும் விரும்பவில்லை. நான் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலுடன் ஒரு செய்தியை சொல்கிறேன். எந்த காலத்திலும் ஓபிஎஸ்சை அதிமுகவில் மீண்டும் சேர்க்கமாட்டோம். எந்த ரகசிய முயற்சியும் நடைபெறவில்லை. எடப்பாடி பழனிசாமி ஒரு கட்சியில் கூட்டணிக்காக பேசும்போது, டெல்லியில் இருந்து எஜமானர்கள் அந்தக் கட்சியினருக்கு ஒன்றிய அமைச்சர் பதவி தருகிறோம் என்று கடத்திப் போய் விடுகிறார்கள், இன்னொரு கட்சிக்கு கவர்னர் பதவி தருகிறேன் என்று கடத்திப் போய் விடுகிறார்கள்.

சிலருக்கு தமிழகத்தை பட்டா போட்டு தருகிறோம் என்றெல்லாம் கூறி வருகிறார்கள். அதிமுக ஓபிஎஸ் பக்கம் போகுமென்ற அண்ணாமலை பேச்சு, அரைவேக்காட்டு தனமாக உள்ளது. அதிமுகவில் குட்டையை குழப்பலாம் என்று தேசிய கட்சி (பாஜ) கங்கணம் கட்டிக்கொண்டுள்ளது. எதுவும் நடக்காது. அதிமுகவின் 50 ஆண்டு கால வரலாற்றில் பலமுறை பிளவு ஏற்பட்டது, தொடர்ந்து மீண்டும் கட்சி எழுந்தது. ஆனால் இந்த அளவுக்கு வழக்குகளை சந்தித்தது இல்லை. இதற்கு ஓபிஎஸ்சின் சுயநலம்தான் காரணம்.

இவ்வாறு தெரிவித்தார்.