Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அண்ணாமலையிடம் சீட்டு வாங்கி பாஜ தலைமையை ஏற்கணும்னா நாண்டுக்கிட்டு செத்துடுவோம்: கொந்தளிக்கும் செல்லூர் ராஜூ

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே பரவை கிராமத்தில் அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது: பாஜ தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை, நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான். அவரை எனக்கு எப்போதுமே பிடிக்காது. அவர் ஒரு தறுதலை. ஒரு அகில இந்திய கட்சியின் மாநில தலைவர் எப்படி இருக்காரு பாருங்க... அதிமுக ஏதோ அவரிடம் கூட்டணிக்கு சென்றது மாதிரி...

அவரு சொல்றாரு, இனிமேல் அதிமுக தலைமை ஏற்க நான் விரும்ப மாட்டேன். எங்களிடம் வந்து கேட்டுப் பெறணுமாம். அந்த மாதிரி பொழப்பு வந்தா நாங்க நாண்டுக்கிட்டு செத்துப் போயிடுவோம். நீயெல்லாம் பேசுறதுக்கு உனக்கெல்லாம் என்ன தகுதி இருக்கு? அதிமுக வந்து இவர்கிட்ட வந்து கேக்கணுமாம்? இவர்கிட்ட வந்து சீட்டுக்கேட்டு நாம நிக்கணுமாம்? இவங்கதான் தலைமை பொறுப்பாம். என்ன வாய்க்கொழுப்போடு பேசுறாரு? அந்த கட்சியில இவரை வச்ேச ஓட்டலாம்னு பாக்குகிறாங்க.

பேசிப் பேசியே பாரதிய ஜனதாவை ஒண்ணும் இல்லாமலாக்கி, கட்சி காவி நிறத்தையே மாத்தப்போறானுங்க. இதுல 70 ஆண்டு கால திராவிட ஆட்சியை குறை வேறு. எங்கள் ஆட்சிதான் பொற்கால ஆட்சி. அந்த கட்சி உங்கிட்ட வந்து சீட்டு கேட்கணுமா? மத்தியில் ஆள்கிற மமதையில் பேசுறாரு. எவ்வளவு வாய்க்கொழுப்பு? இப்படி பேசிப் பேசியே மத்தியில் தனிப் பெரும்பான்மையுடன் இருந்த பாரதிய ஜனதா, இன்றைக்கு மைனாரிட்டி அரசாக மாறிப் போயிருக்கு. இப்படிப்பட்ட மாநிலத்தலைவன் இருக்கிறதுனாலதான். இவ்வாறு பேசினார்.

* செல்லூர் ராஜூ மீது போலீசில் பாஜ புகார்

விருதுநகர் எஸ்பி அலுவலகத்தில் பாஜ கிழக்கு மாவட்ட துணைத்தலைவர் குமரேசன் தலைமையில் நேற்று புகார் மனு அளித்தனர். மனுவில், ‘‘மதுரை அருகே நடைபெற்ற அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, பாஜ மாநில தலைவர் அண்ணாமலையை பொதுமேடையில் ஒருமையிலும், ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்தும் விதமாகவும் விமர்சித்துள்ளார். மேலும் தொடர்ந்து தரக்குறைவான வார்த்தைகளில் நாகரிகமின்றி பாஜ மாநில தலைவரை பேசி வருகிறார். எனவே செல்லூர் ராஜூ மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.