Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அண்ணாமலை புதிய கட்சி துவங்க உள்ளாரா?: வானதி சீனிவாசன் விளக்கம்

கோவை: நாடாளுமன்ற தேர்தலில் பாஜவுக்கு தேர்தல் களப்பணி ஆற்றிய தன்னார்வலர்கள், நிர்வாகிகள் உடனான மோடி 3.0 என்ற கலந்துரையாடல் கூட்டம் மற்றும் வாய்ஸ் ஆப் கோவை அமைப்பு துவக்க நிகழ்ச்சி கோவை வடகோவையில் உள்ள குஜராத் சமாஜத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாஜ மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.

எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வானதி சீனிவாசன் பேசுகையில், கோவை உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு தொகுதி. நான் தேர்தல் சமயத்தில் எந்த மாநிலம் சென்றாலும் கோவையில் ஜெயிச்சிருவீங்க இல்ல, அண்ணாமலை ஜெயிச்சிருவார் இல்ல, இதுதான் மக்கள் எதிர்பார்ப்பாக இருந்தது. தேர்தலுக்காக எத்தனை பேர் வேலை பார்த்துள்ளோம், தோல்வியால் ஒருவித சோகம் இருக்கும்.

கோவையின் வளர்ச்சியை தவறவிட்டு விட்டார்களே என்ற கோபம்கூட மக்கள் மீது எழும். தம்பி அண்ணாமலை ஒரு நல்ல காரியம் செய்துள்ளார். கட்சிக்காரர்கள் அனைவரையும் இந்த நிகழ்ச்சிக்கு அழைத்துள்ளார். இல்லையென்றால் அண்ணாமலை வாய்ஸ் ஆப் கோவை என்று தனியாக ஆரம்பித்துள்ளார். தனியாக கட்சி ஆரம்பிக்க போகிறார் என்று ஒரு கதையை சுற்றிவிட்டு இருப்பார்கள். அந்த மாதிரி புரளி கிளப்புபவர்களுக்கு வாயை மூடுவதற்கான வாய்ப்பாக இது அமைந்துள்ளது. இவ்வாறு வானதி சீனிவாசன் பேசினார். இதனை தொடர்ந்து வேறொரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக வானதி சீனிவாசன் பாதியிலேயே கிளம்பினார்.