திருப்பதியில் ஆனிவார ஆஸ்தானத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்: 6 மணி நேரத்திற்கு பிறகு பக்தர்கள் தரிசனம்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆனிவார ஆஸ்தானம் இன்று நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று அதிகாலை சுப்ரபாதம் மற்றும் நித்ய பூஜைகளுக்கு பிறகு காலை 6 மணி முதல் 11 மணி வரை ஆழ்வார் திருமஞ்சனம் எனும் கோயிலை சுத்தம் செய்யும் பணி நடந்தது. இதனால் 6 மணி முதல் பக்தர்கள் தரிசனமும், அஷ்டதளபாத பத்ம ஆராதனை சேவையும் ரத்து செய்யப்பட்டது.
பின்னர் கருவறையில் மூலவர் ஏழுமலையான் மீது பட்டுவஸ்திரங்களால் மூடப்பட்டது. தொடர்ந்து கருவறை, ஆனந்த நிலையம், கொடிமரம், யோக நரசிம்ம சுவாமி, வகுலமாத, பாஷ்யகாரல சன்னதிகள், சம்பங்கி மண்டபம், ரங்கநாதர் மண்டபம், மகாதுவாரம் என அனைத்து இடங்களும் தூய்மைபடுத்தப்பட்டது.
தொடர்ந்து பச்சை கற்பூரம், திருச்சூனம், மஞ்சள், கிச்சலிகட்டை, சந்தனம் உட்பட பல்வேறு மூலிகை பொருட்கள் கொண்டு புனிதநீர் கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டது. இதையடுத்து ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மதியம் 12 மணிக்கு பிறகு வழக்கம்போல் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.