Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

விடிய விடிய கொட்டித்தீர்த்தது ஆந்திராவில் பலத்த மழைக்கு 7 பேர் பலி: சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம், வாகனங்கள் நீரில் மூழ்கியது

திருமலை: ஆந்திர மாநிலத்தில் பெய்த பலத்த மழைக்கு 7 பேர் பலியாகி விட்டனர். ஆந்திர மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. என்.டி.ஆர் மற்றும் கிருஷ்ணா, குண்டுர் மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்ததால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் ஆந்திராவில் உள்ள முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குடிவாடா பஸ் ஸ்டாண்டில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்தது.

விஜயவாடா கொத்தப்பேட்டை சாலையில் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகம் உள்ள பகுதியில் வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கியது.  விஜயவாடாவில் உள்ள சாலையில் பெரும்பாலான வாகனங்கள் பழுதாகி அப்படியே நின்றுவிட்டது. ஆர்டிசி பஸ் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. விஜயவாடா சுண்ணாம்பு சூளை அருகே நேற்று அதிகாலை மண் சரிவு ஏற்பட்டு பெரிய பாறை ஒன்று பயங்கர சத்தத்துடன் சரிந்து அருகே இருந்த வீட்டின் மீது விழுந்தது.

இதில் வீடு முழுவதும் தரைமட்டமாகி மண்ணில் புதைந்தது. அந்த வீட்டில் இருந்த 4 பேர் உயிரிழந்தனர். குண்டூர் மாவட்டம் பெடகக்காணி மண்டலம் உப்பலபாடு அரசு பள்ளியில் கணித ஆசிரியராக பணி புரியும் ராகவேந்திரா நேற்று உப்பலபாடுவில் இருந்து பள்ளியில் படிக்கும் மாணவர்களான சாத்விக், மான்விக் ஆகியோருடன் தனது காரில் திரும்பி சென்று கொண்டிருந்தார்.

அவரது கார் ஓடை கால்வாயில் அடித்துச்செல்லப்பட்டது. இதில் ஆசிரியர் ராகவேந்திரா, மாணவர்கள் சாத்விக், மான்விக் ஆகியோர் உயிரிழந்தனர். இதனால் ஆந்திராவில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 7ஆனது. இவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதியை முதல்வர் சந்திரபாபுநாயுடு அறிவித்துள்ளார்.