Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அன்புமணி நீக்கம்? ராமதாஸ் ஆலோசனை; தைலாபுரம் தோட்டத்தில் பரபரப்பு

திண்டிவனம்: திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் தான் நியமித்த புதிய நிர்வாகிகளுடன் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அதிகாரத்தை கூடுதலாக்குவது குறித்தும், அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறார். பாமகவில் நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இடையே புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுவின் போது ஏற்பட்ட மோதல் இதுவரையிலும் நீடித்து வருகிறது. குறிப்பாக கட்சியில் அதிகாரம் யாருக்கு என்பதை தந்தை, மகன் இடையில் நீயா... நானா.. போட்டி உச்சகட்ட நிலைக்கு வந்துள்ளது. போட்டிக்கு போட்டியாக இருவரும் கட்சியில் நிர்வாகிகள் நியமனம் தொடர்பான உத்தரவுகளை பிறப்பித்து வருவதுடன், நிர்வாகிகளின் கூட்டத்தையும் நடத்தி வருவது பாமகவில் மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தைலாபுரத்தில் ராமதாஸ் ஒருபுறம் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட, மறுபுறம் அன்புமணி மாவட்ட பொதுக்குழு கூட்டம், களப்பயணம் என்று அடுத்தடுத்த நிகழ்வுகளுக்கு இறங்கி அதிரடி காட்டி வருகிறார். மேலும் கட்சியின் மூத்த நிர்வாகிகளை வளைக்கும் பணிகளிலும் தீவிரமாக இறங்கி உள்ளார்.

கட்சியின் முக்கிய பதவிகளில் இருவரும் தங்களுக்கு ஆதரவானவர்களை நியமித்து வரும் நிலையில், தங்களுக்கு தான் அதிகாரம் என்பதையும் அவ்வப்போது வெளிப்படுத்தி வருவதால் பாமகவின் தொண்டர்கள் எந்த பக்கம் என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது. பாமகவின் புதிய தலைமை நிலைய செயலாளராக செல்வகுமார் என்பவரை அன்புமணி நேற்று நியமித்த நிலையில், ராமதாசும் செய்தி தொடர்பாளராக சுவாமிநாதனை நியமித்துள்ளார். மேலும், புதிய பொதுச்செயலாளராக முரளி சங்கரை நியமிக்கவும் உள்ளதாக தெரிகிறது. தொடர் குற்றச்சாட்டு, பகிரங்க புகார் உள்ளிட்ட காரணங்களால் ராமதாசை புறக்கணித்து கட்சியை தான் வழிநடத்த அன்புமணி முனைப்பு காட்ட துவங்கி விட்டதாக அவரது ஆதரவு நிர்வாகிகள் கூறிவருகின்றனர். இதன் எடுத்துக்காட்டாக தான் ஜூலை மாதம் நடக்க உள்ள நடைபயண போஸ்டரின் ராமதாஸ் படம் இல்லாமல் அன்புமணியை மட்டும் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதபோன்ற சூழலால் பாமக இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. பாமக அதிகார போட்டியில் வெல்ல போவது தந்தையா... மகனா... இந்த பரபரப்பும் கட்சிக்குள் எழுந்துள்ளது. இந்த பரபரப்பான சூழலில் இன்று முதல் மாவட்ட பொதுக்குழு கூட்டங்கள் ஒவ்வொரு பகுதியிலும் நடத்தி தனது செல்வாக்கை நிரூபித்து தான் தான் தலைவர் என்பதை வெளிப்படுத்தும் விதமாக நேரடி களப்பணிகள் அன்புமணி இறங்குகிறார். இது தனக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என்பதால், இந்த பொதுக்குழு கூட்டங்களில் யாரும் பங்கேற்க கூடாது என்று உத்தரவையும் கட்சியின் நிறுவனரான ராமதாஸ் அதிரடியாக பிறப்பித்துள்ளார். நிர்வாகிகள் அன்புமணி கூட்டத்திற்கு செல்வதை தடுக்கும் வகையில், தான் நியமித்த புதிய நிர்வாகிகளுடன் கைலாபுரம் தோட்டத்தில் இன்று முக்கிய ஆலோசனை கூட்டம் என்று ராமதாஸ் அழைப்பு விடுத்திருத்தார். அதன்படி தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 10 மணி அளவில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. கவுரவத் தலைவர் ஜிகே மணி, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

அவர்களுடன் ராமதாஸ் கட்சி வளர்ச்சி பணிகள், கட்சி தலைவருக்கு எதிராக செயல்பட்டு வரும் அன்புமணி மீதான நடவடிக்கை, பொதுக்குழு கூட்டத்தை எப்போது கூட்டுவது, தனக்கான அதிகாரத்தில் எதை எல்லாம் கொண்டு வருவது குறித்தும் முடிவெடுக்கப்பட்டது. மேலும், பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணியை நீக்குவது குறித்தும் ராமதாஸ் முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் புதிய நிர்வாகிகள் உடனான இந்த கூட்டம் முடிந்த பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ராமதாஸ் இறங்கலாம் என்று தைலாபுரம் தோட்டம் விட்டார்கள் தெரிவிக்கின்றன. தந்தை மகன் இடையே ஏற்பட்டுள்ள மோதல் பாமக கட்சிகளும் பிரச்னைகளை உருவாக்கலாம் என்பதால் தைலாபுரம் தோட்டத்திலும், அன்புமணி பொதுக்கூட்டம் நடத்துகின்ற பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது.