Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அன்புமணிக்கு தலைமைப் பண்பு இல்லை; 2026 சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை நானே பாமக தலைவர் : ராமதாஸ் திட்டவட்டம்

விழுப்புரம் : 2026 சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை நானே பாமக தலைவர் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ராமதாஸ் - அன்புமணி இடையிலான மோதல் முற்றியுள்ள நிலையில், தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், " என் கைகளைக்கொண்டே என் கண்ணை நான் குத்திக்கொண்டேன். என்னையே குறிவைத்து இலக்காக்கி தாக்குகின்றனர். மோடி பதவியேற்பு விழாவுக்கு டெல்லி செல்லும்போது கட்சியை நான் பார்த்துக் கொள்கிறேன் என அன்புமணி கூறினார். நான் ஏதேனும் தவறாக கூறியிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள் என்று கூறி 2 சொட்டு கண்ணீர் விட்டார் அன்புமணி.

அன்புமணி கூறியதற்கு நான் எதுவும் சொல்லாமல் தைலாபுரம் வந்துவிட்டேன். 6-7 ஆண்டுகளுக்கு முன்பே கட்சியை கைப்பற்றும் எண்ணம் அன்புமணிக்கு இருந்திருக்கிறது. அன்புமணி எப்படி தலைவரானார் என்பது சிலருக்கு தெரியும்; சிலருக்கு தெரியாது. பாமகவின் தலைவராக அன்புமணியை ஆரத்தழுவி தேர்ந்தெடுத்தோம்; ஆனந்தக் கண்ணீர் வடித்தோம்.என் குடும்ப பெண்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது என்று சவுமியாவிடம் சொன்னேன். ஆனால் இப்போது நடப்பது உங்களுக்கு தெரியும். பொதுக்குழுவில் சொன்னதுபோல் குடும்ப பெண்கள் கட்சியில் வேண்டாம் என்று சொன்னேன். என்னிடம் கெஞ்சி, கூத்தாடி, வாதாடி தருமபுரியில் போட்டியிட்டார் சவுமியா. தருமபுரி தொகுதியில் முதலில் தான் நிற்பதாக கூறிய அன்புமணி, பின்னர் சவுமியா நிற்பதாக கூறினார். தனது குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் அரசியலுக்கு வேண்டாம் என்று கூறியதற்கு எதிர்மாறாக அன்புமணி செயல்பட்டார்.

பா.ம.க. விவகாரத்தில் அன்புமணிக்கும் எனக்கும் இடையிலான பிரச்சனைக்கு தீர்வே இல்லை என்றுதான் நினைக்கிறேன். தேர்தலுக்கு பிறகு அன்புமணிதானே எல்லாம் பார்த்துக் கொள்ளப் போகிறார். அன்புமணியிடம் இரு ஜாம்பவான்கள் பேசியும் எந்தப் பயனும் கிடைக்கவில்லை. யார் சொன்னாலும் அன்புமணி கேட்க மாட்டார். முயலுக்கு மூன்று கால் என்கிறார் அன்புமணி; நான்கு கால் என ஒப்புக்கொண்டால் பிரச்சனை தீர்ந்துவிடும். 40 தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து கட்சி பணிகளை செய்தோம்; அதற்கு அன்புமணி ஒத்துழைப்பு தரவில்லை. நாம் வெற்றி பெற்றால்தான் நம்மை தேடி கூட்டணி கட்சிகள் வரும்.உழைப்பதற்கு அன்புமணி தயாராக இல்லை; கட்சியை அவர் ஒழுங்காக நடத்தவில்லை. அன்புமணியை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கமாட்டேன்.

2026 சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை நானே பாமக தலைவர். தேர்தலுக்குப் பிறகு அனைத்தையும் அவர் எடுத்துக் கொள்ளட்டும். அமைச்சர் பதவி உள்ளிட்ட எதனையும் நான் எதிர்பார்த்தது இல்லை. எனக்கு மக்கள்தான் முக்கியம்; நாடுதான் முக்கியம். வாக்களிக்கும் அனைவரும் எனக்கு ஆதரவாக உள்ளனர். அனைத்து சாதிகளைச் சேர்ந்தவர்களும் முன்னேற பாடுபட்டு வருகிறேன். அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் நிறைவடைந்துவிட்டது. தலைவர் பதவி 3 ஆண்டுகள் மட்டுமே. பாமக பொதுக்குழு கூடிதான் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்க முடியும். பொதுக்குழுவை கூட்டுவது குறித்து நிறுவனரான நான்தான் முடிவுசெய்வேன். பாமக கூட்டணி குறித்து நானே முடிவு எடுப்பேன். செயல் தலைவராக செயல்படத் தயார் என்று அன்புமணி அறிவிப்பதே தீர்வு.அன்புமணிக்கு தலைமைப் பண்பு இல்லை. கோல் ஊன்றி நடந்தாலும் மக்களுக்காக பாடுபடுவேன்," இவ்வாறு தெரிவித்தார்.