Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சேலத்தில் பொதுக்குழுவை கூட்டும் அன்புமணி பாமக எம்எல்ஏக்கள் இருவருக்கு அடுத்தடுத்து ‘திடீர்’ நெஞ்சுவலி: உச்சகட்ட பதற்றத்தில் தொண்டர்கள்

சென்னை: பாமக பொதுக்குழுவை சேலத்தில் அன்புமணி தரப்பு இன்று கூட்டும் நிலையில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் இருவருக்கு அடுத்தடுத்து திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் கட்சி தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பியுள்ளது. பாமக தலைவர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கட்சிப் பொதுக் கூட்டத்தில் இருந்தே மோதல் தொடங்கிவிட்டது. தனது பேரன் முகுந்தனை பாமகவின் இளைஞரணி தலைவராக ராமதாஸ் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு அன்புமணி கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், தந்தை மகனுக்கிடையிலான மோதல் மேடையிலேயே அம்பலமாகியது. இதைத்தொடர்ந்து, அன்புமணியை கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார். உடனடியாக, தானே தலைவராகத் தொடர்வேன் என்றும் அன்புமணி அறிவித்தார். பின்னர், இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையிலும் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. அன்புமணி மீதும், அவரின் மனைவி சவுமியா மீதும் சரமாரியான குற்றச்சாட்டுகளை ராமதாஸ் முன் வைத்து வருகிறார். தனது மூச்சு அடங்கும் வரை அன்புமணிக்கு தலைவர் பதவியை அளிக்க மாட்டேன் என்று ராமதாஸ் அறிவித்து இருக்கிறார்.

இதனால், பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும், இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கட்சி கிட்டதட்ட இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது. பாமகவின் தலைவரான அன்புமணி பின்னால், 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோன்று மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்களின் ஆதரவும் அன்புமணிக்ேக இருக்கிறது என்றும் சொல்கின்றனர். ராமதாஸ் இதுவரை சுமார் 73 மாவட்ட செயலாளர்கள், 57 மாவட்ட தலைவர்களை நீக்கியுள்ளார். பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட தலைவர் என்ற முறையில் நிர்வாகிகளை நியமிப்பதற்கு தனக்கு அதிகாரம் உள்ளது என்று ராமதாஸ் கூறுகிறார். ஆனால், அவர் நீக்கிய நிர்வாகிகளை அன்புமணி மீண்டும் நியமித்து வருகிறார்.

இதனால், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பாமகவில் தொடர்ந்து சலசலப்புகள் அதிகரித்து வருகின்றன. இதற்கிடையே கடந்த வாரத்தில் பொது மேடையிலேயே அன்புமணி மன்னிப்பு கேட்டிருந்தார். ஆனாலும், அவருடைய மன்னிப்புக்கு ராமதாஸ் தரப்பில் இருந்து எந்தவொரு ரியாக் ஷனும் வரவில்லை. இதையடுத்து, ராமதாஸ் வழக்கம்போல பாமக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தநிலையில், அன்புமணி 10 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஒவ்வொரு வருவாய் மாவட்டம் வாரியாக, பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு, அன்புமணி சிறப்புரையாற்றி வருகிறார். அந்த வகையில் இன்று சேலம் மாவட்ட பொதுக்குழு நடைபெற உள்ளது. அன்புமணி இன்று சேலம் செல்ல உள்ள நிலையில், ராமதாசின் தீவிர ஆதரவாளரான எம்எல்ஏ அருள் மற்றும் பாமக மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான ஜி.கே.மணி ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்களா? மாட்டார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், சேலம் மேற்கு தொகுதி பாமக எல்எல்ஏ அருள், சபாநாயகர் அப்பாவுவை சந்திப்பதற்காக நேற்று மதியம் தலைமைச் செயலகம் வந்தார். அப்போது அருளுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதன் காரணமாக உடனடியாக தலைமைச் செயலகத்தில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு அவருக்கு, இசிஜி உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், உடல் அசவுகரியமாக இருந்ததால் இப்படி ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, பாமகவின் கவுரவத் தலைவரும், கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான ஜி.கே.மணி எம்எல்ஏவுக்கும் நேற்று திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாமக தலைவர் அன்புமணி தலைமையில் இன்று பாமகவின் பொதுக்குழு கூட்டம் சேலத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த பாமக எம்எல்ஏக்கள் இருவர், அடுத்தடுத்து ‘திடீர்’ நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பாமகவினர் மத்தியில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

ஒரே நேரத்தில் இருவருக்கு ஏற்பட்டுள்ள நெஞ்சுவலி, பாமக நிர்வாகிகள் மற்றும் அன்புமணி ஆதரவாளர்கள் மத்தியில் புதிய விவாதத்தை தொடங்கி இருக்கிறது. பாமகவில் மொத்தம் உள்ள 5 எம்எல்ஏக்களில் மூவர் அன்புமணியை ஆதரிக்கும் நிலையில் ராமதாசை ஆதரிக்கும் ஜி.கே.மணி, அருள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தற்போது பேசுபொருளாகியுள்ளது. பாமக எம்எல்ஏ அருள் திட்டமிட்டு இன்று பொதுக்குழுவில் கலந்து கொள்ளாமல் தப்பிப்பதற்காக நெஞ்சுவலி என மருத்துவமனையில் சேர்ந்துள்ளாரா? என்று அன்புமணி தரப்பினர் சமூக வலைதளங்களில் சந்தேகத்தை எழுப்பி பதிவிட்டு வருவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே கடந்த மே 30ம் தேதி சென்னை சோழிங்கநல்லூரில் அன்புமணி நடத்திய மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திலும் சேலம் அருள் பங்கேற்காமல் புறக்கணித்திருந்தார். அப்போது தனக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக கூறி, மருத்துவமனையில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தனது சொந்த தொகுதியில் பொதுக்குழுவை அன்புமணி கூட்டியுள்ள நிலையில் அவருக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெஞ்சுவலி கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரங்கள் குறித்து பாமக மூத்த நிர்வாகிகளை தொடர்பு கொண்டு விசாரிக்கையில், ‘‘கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் அருளிடம் தொலைபேசி மூலம், பொதுக்குழு கூட்டம் குறித்து விசாரித்துள்ளனர். அப்போது அதற்கு எதுவும் பதில் சொல்லாமல் தொலைபேசியை துண்டித்து விட்டதாக கூறுகின்றனர். உண்மையாகவே அவருக்கு உடல்நிலை பிரச்சனை என்றால், அவர் குணமாகி வரவேண்டும். ஆனால் பொதுக்குழு இன்று நடைபெற உள்ள நிலையில், ஏன் அவர் சென்னை சென்றார் என்பதும் குழப்பமாக இருக்கிறது. எங்கள் கட்சியை சேர்ந்த ஒரு சிலரே, சமூக வலைதளங்களில் அவர் மருத்துவமனையில் சேர்ந்தது குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர். கட்சியில் நடைபெறும் பிரச்சனை விரைவில் தீரும்’’ என்றனர்.