அமித்ஷாவை சந்தித்தால் என்ன தப்பு? இந்திய நாட்டின் உள்துறை அமைச்சர்தானே அவர்? : எடப்பாடி பழனிசாமி கேள்வி
புதுக்கோட்டை : உள்துறை அமைச்சரை சந்தித்தால் என்ன தப்பு? இந்திய நாட்டின் உள்துறை அமைச்சர்தானே அவர் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக நாளை தமிழகம் வருகிறார். திருச்சியில் தங்கும் அவரை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜவினர் கூட்டணி ஆட்சி என்று கருத்து தெரிவித்து வரும் வேளையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நிலையில், புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி, "நாளை இரவு தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்கும் நேரம் இன்னும் உறுதியாகவில்லை.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தால் என்ன தப்பு?. இந்திய நாட்டின் உள்துறை அமைச்சர்தானே அவர்?. யூகத்தின் அடிப்படையில் புதிதாக கூட்டணிக்கு வரும் கட்சிகளை பற்றி கூற முடியாது. தற்போது அதிமுக பாஜகவோடு கூட்டணி அமைத்துள்ளது. டி.டி.வி. தினகரன் குறித்தெல்லாம் கேள்வி எழுப்ப வேண்டாம். பாஜக கூட்டணியில் இருப்பதாக டிடிவி தினகரன்தான் கூறிக் கொண்டிருக்கிறார்; நாங்கள் கூறவில்லை. ஊடகங்களில் சிலவற்றைதான் கூறமுடியும்; சிலவற்றை பேச முடியாது."இவ்வாறு தெரிவித்தார்.