அமித் ஷா எவ்வளவு சீண்டினாலும் அதை எதிர்கொள்ள கருப்பு, சிவப்பு படை தயார்: துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு
திருவண்ணாமலை: அமித் ஷா எவ்வளவு சீண்டினாலும் அதை எதிர்கொள்ள கருப்பு, சிவப்பு படை தயார் என திருவண்ணாமலையில் வடக்கு மண்டல திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி உரையாற்றினார்.
மேலும் "அமித் ஷா எவ்வளவு சீண்டினாலும் அதை எதிர்கொள்ள கருப்பு, சிவப்பு படை தயார். தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு அவுட் ஆஃப் கன்ட்ரோல்தான் என்று கூறியவர் முதலமைச்சர். குஜராத்தில் உட்கார்ந்து கொண்டு மிரட்டிப் பார்க்கலாம் என்று நினைத்தால் அது கனவில் கூட முடியாது. தமிழ்நாட்டை சங்கி கூட்டத்தால் தொட்டுக் கூட பார்க்க முடியாது.
மதம்பிடித்த யானை என நினைத்துக் கொண்டு இருக்கும் பாஜகவை அடக்கும் அங்குசம் நம் முதலமைச்சரின் கைகளில் உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலிலும் திமுக மகத்தான வெற்றியை பெறும் என்பது நிச்சயம். என்ஜின் இல்லாத காரான அதிமுகவை பாஜக எனும் லாரி இழுத்துச் செல்லப் பார்க்கிறது. அடிமையாக இருந்து சுகமாக வாழ்வதை விட சுயமரியாதையுடன் சுகமாக வாழ்வதே முக்கியம்.
பாசிச சக்திகளிடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்றும் ஆற்றல் திமுகவுக்குதான் உள்ளது என மக்கள் நம்புகிறார்கள். திருவண்ணாமலையில் மலை மட்டுமல்ல, கடல் போல் கூடியிருக்கும் இளைஞரணியினரும் உள்ளனர். பல கட்சிகள் உறுப்பினர்களை சேர்க்கவே தடுமாறுகிறது. எதிரிகள் போடும் தப்புக்கணக்கை சுக்குநூறாக உடைக்கக் கூடியுள்ள கூட்டம் இளைஞரணி கூட்டம்.
திமுக இளைஞரணியினர் மிகுந்த கட்டுப்பாடு மிக்கவர்கள். கட்டுப்பாடு இல்லாத கூட்டத்தை வைத்துக் கொண்டு யாராலும் எதுவும் சாதிக்க முடியாது. இளைஞர்களை திரட்டுவது சாதாரண விஷயம் அல்ல; நாம்தான் மாநாடு போல இளைஞரணியை கூட்டியுள்ளோம்.
வானவில் கலர் கலரா அழகா இருக்கும். அதைப் பார்ப்பதற்கு மக்கள் நிறைய பேர் கூடுவார்கள். ஆனால் அது நிரந்தரமல்ல. உதயசூரியன் மட்டும்தான் நிரந்தரம். திமுகவினர் களத்தில் இருந்து எப்போதும் பின்வாங்கியது இல்லை" என உரையாற்றினார்.


