அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்தியா மீதான 50% வரிக்கு எதிராக 3 எம்பிக்கள் தீர்மானம்: முக்கியமான ஒத்துழைப்பை பலவீனப்படுத்துவதாக கவலை
வாஷிங்டன்: இந்தியா மீது அதிபர் டிரம்ப் விதித்த 50 சதவீத வரியை ரத்து செய்ய வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றத்தில் முக்கியமான 3 எம்பிக்கள் தீர்மானம் தாக்கல் செய்துள்ளனர். வட கரோலினாவைச் சேர்ந்த எம்பி டெபோரா ராஸ், டெக்சாசை சேர்ந்த மார்க் வீசி, இல்லியானசை சேர்ந்த இந்திய வம்சாவளி எம்பி ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையில் தாக்கல் செய்துள்ள தீர்மானத்தில், ‘சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தின் கீழ் இந்திய இறக்குமதி பொருட்கள் மீது விதிக்கப்பட்ட 25 சதவீத வரியையும், மேலும் 25 சதவீத கூடுதல் துணை வரிகளையும் ரத்து செய்ய வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.
இது குறித்து ராஜா கிருஷ்ணமூர்த்தி, ராஸ் ஆகியோர் கூறுகையில், ‘‘இந்தியாவிற்கு எதிரான அதிபர் டிரம்பின் பொறுப்பற்ற வரி உத்தி ஒரு எதிர்மறையான அணுகுமுறை. இது ஒரு முக்கியமான கூட்டாண்மையை பலவீனப்படுத்துகிறது. இந்த வரிகள் விநியோகச் சங்கிலிகளை சீர்குலைத்து, அமெரிக்கத் தொழிலாளர்களைப் பாதிக்கின்றன. மேலும் நுகர்வோருக்கான செலவுகளையும் அதிகரிக்கின்றன.
இந்தத் தீங்கு விளைவிக்கும் வரிகளை முடிவுக்குக் கொண்டுவருவது, பரஸ்பர பொருளாதார மற்றும் பாதுகாப்புத் தேவைகளை மேம்படுத்துவதற்காக இந்தியாவுடன் இணைந்து செயல்பட அனுமதிக்கும்’’ என்றனர். சமீபத்தில் பிரேசில் மீதான வரிகளை நீக்கக் கோரும் தீர்மானம் செனட் அவையில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இந்த தீர்மானம் தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


