Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நான் இல்லாவிட்டால் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று இருக்க முடியாது, நன்றி கெட்டவர் டிரம்ப் : எலான் மஸ்க் காட்டம்

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் தாம் இல்லாவிட்டால் டிரம்ப் வெற்றி பெற்று இருக்க முடியாது என்றும் அவர் நன்றி கெட்டவர் என்றும் தொழிலதிபர் எலான் மஸ்க் காட்டமாக விமர்சித்துள்ளார். டொனால்டு டிரம்ப், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் இடையே நட்புறவு இருந்ததால் குடியரசு கட்சிக்கு அதிக நிதி வழங்கிய மஸ்க், ட்ரம்பிற்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வெற்றி தேடி தந்தார். இதனால் அமெரிக்க அரசின் செலவின சீர்திருத்தங்களுக்காக உருவாக்கப்பட்ட DOGE என்ற அமைப்பின் ஆலோசகராக எலான் மஸ்க்கை டிரம்ப் நியமித்தார். ஆனால் அண்மைக்காலமாக இருவருக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து, DOGE அமைப்பில் இருந்து எலான் மஸ்க் விலகினார்.

இதற்கிடையே வரிச் சலுகைகள் கொண்ட மசோதாவை டிரம்ப் அரசு கொண்டு வந்தது. அது குறித்து விமர்சித்த எலான் மஸ்க், தம்மால் இதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும் தேவையற்ற விஷயங்கள் நிறைந்த இந்த மசோதா அருவறுக்கத்தக்கது என்றும் குறிப்பிட்டார். மசோதா குறைந்த வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள இந்த மசோதாவில் மின்சார வாகனங்களுக்கான வரிச் சலுகை ரத்து செய்யப்பட்டது. இந்த மசோதா நிறைவேறிய சிறிது நேரத்தில் டெஸ்லா பங்குகள் 8% வீழ்ச்சி அடைந்தன. இந்த நிலையில் மசோதா குறித்து பேசிய ட்ரம்ப், இங்கு இருப்பவர்களை விட மசோதா குறித்து எலான் மஸ்க்கிற்கு நன்கு தெரியும் என்றும் இதில் அவருக்கு எந்த பிரச்னையும் இல்லை எனவும் கூறினார். டிரம்ப் பேசிய வீடியோவை டேக் செய்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க், அவர் கூறுவது தவறானது என்றும் மசோதா தனக்கு ஒருமுறை கூட காண்பிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அதே போல் குடியரசு கட்சி உறுப்பினர்கள் யாரும் படிக்கக் முடியாத அளவிற்கு நடு இரவில் மசோதா வேக வேகமாக நிறைவேற்றப்பட்டது என்றும் சாடியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் தாம் இல்லாவிட்டால் டிரம்ப் வெற்றி பெற்று இருக்க முடியாது என்றும் அவர் நன்றி கெட்டவர் என்றும் எலான் மஸ்க் காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.