டோக்கியோ: சீன அரசின் ஆதரவு பெற்ற ஹேக்கிங் கும்பல் பல நாடுகளில் தகவல்களை திருடுவதாக நீண்டகாலமாக குற்றம்சாட்டப்படுகிறது. இதனை சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்காவின் கருவூல துறை கம்ப்யூட்டர்களில் சீன அரசின் ஹேக்கர்கள் நுழைந்து முக்கியமான பல தகவல்களை திருடியதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அமெரிக்காவை தொடர்ந்து ஜப்பானும் சீன ஹேக்கர்கள் குறித்து குற்றம்சாட்டி உள்ளது. சீனாவின் மிரர்பேஸ் என்ற ஹேக்கிங் கும்பல் தங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்பு, தொழில்நுட்ப துறையின் முக்கிய தகவல்களை திருட 2019 முதல் 2023 வரை 200 முறை சைபர் தாக்குதல் நடத்தியிருப்பதாக ஜப்பானின் தேசிய போலீஸ் ஏஜென்சி குற்றம்சாட்டி உள்ளது. இதுமட்டுமின்றி வெளியுறவு, பாதுகாப்பு அமைச்சகங்கள், விண்வெளி ஆய்வு மையம், முக்கிய அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், தனியார் நிறுவனங்களுக்கு இமெயில் மூலம் மால்வேர்களை அனுப்பி அவர்களின் தகவல்களையும் சீன கும்பல் திருடியதாக கூறப்பட்டுள்ளது. சீன ஹேக்கர்களை தடுக்க முடியவில்லை என கவலை தெரிவித்துள்ளது.