கேப் டவுன்: அமெரிக்காவில் இருந்து 5 பேர் ஆப்பிரிக்க நாடான எஸ்வதினிக்கு நாடு கடத்தப்பட்டனர். அமெரிக்க அதிபராக 2ம் முறை பதவி ஏற்ற டிரம்ப் நிர்வாக சீர்திருத்தத்தை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களும், தங்கள் சொந்த நாடுகளில் குற்றம் இழைத்து விட்டு அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தவர்களும் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர்.
அவர்களில் சிலர் அமெரிக்காவுடன் எந்த வகையிலும் நட்பு கொண்டிராத மூன்றாம் நாடுகளுக்கும் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். அதிபர் டிரம்பின் நாடு கடத்தும் நடவடிக்கைக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றமும் அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் நாடு கடத்தும் திட்டத்தின் ஒருபகுதியாக 5 பேர் சிறிய ஆப்பிரிக்க நாடான எஸ்வதினிக்கு நாடு கடத்தப்பட்டனர்.
இதுகுறித்து அமெரிக்க பொதுவிவகாரங்களுக்கான உதவி செயலாளர் டிரிசியா மெக்லாலின் தன் எக்ஸ் பதிவில், “வியட்நாம், ஜமைக்கா, கியூபா, ஏமன் மற்றும் லாவோஸ் நாடுகளை சேர்ந்த 5 ஆண்கள் விமானம் மூலம் எஸ்வதினிக்கு கடத்தப்பட்டனர். அவர்கள் அனைவரும் தண்டனை பெற்ற குற்றவாளிகள். அவர்களை திரும்ப அழைத்து செல்ல அவர்களின் சொந்த நாடுகள் மறுத்து விட்டன” என தெரிவித்துள்ளார்.