அமெரிக்காவில் ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
அமெரிக்கா: முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டினை, 2030ம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற முதல்வரின் இலக்கினை விரைவில் அடைவதற்காகவும், தமிழ்நாடு அரசின் தொழில் துறை பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்துடனும், மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேலும் மேம்படுத்துவதற்காகவும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமெரிக்காவில் அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இப்பயணத்தின் போது, முதலமைச்சர் முன்னிலையில் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில், உலகின் 14 முன்னணி தொழில் நிறுவனங்களுடன் ரூ.4350 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் அலுவலகங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். மேலும் உலகளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக சிகாகோவில், ஜாபில் நிறுவனத்துக்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.2000 கோடி முதலீட்டில் 5000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் திருச்சியில் மின்னணு உற்பத்தி நிறுவனம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.666 கோடி முதலீட்டில் 365 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், காஞ்சிபுரத்தில் மின்னணு உற்பத்தி நிறுவன விரிவாக்கத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் மீண்டும் போர்டு கார் நிறுவனத்தின் உற்பத்தியை தொடங்குவது பற்றி போர்டு மோட்டார்ஸ் நிறுவனத்தின் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி உள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் போர்டு நிறுவனத்தின் கார் உற்பத்தியை மீண்டும் தொடங்குவது பற்றி அந்நிறுவன குழுவினருடன் சிறப்பான முறையில் ஆலோசனை நடந்தது.
30 ஆண்டுகளாக தமிழகத்துடன் நட்புறவுடன் இணைந்து செயல்பட்டு வந்த அந்நிறுவனத்தின் கார் உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பேச்சுவார்த்தை நடந்தது என பதிவிட்டு உள்ளார். சென்னை மறைமலை நகரில் நடந்து வந்த உற்பத்தியை கடந்த 2022ம் ஆண்டுடன் அந்நிறுவனம் நிறுத்தி விட்டது. அதனை மீண்டும் தமிழகத்தில் கொண்டு வருவதற்கான முயற்சியாக இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.